கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி டிஜிபியிடம் உதயநிதி ஸ்டாலின் மனு

Priya
7 Views
2 Min Read

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, ஆட்சியரின் இல்லத்துக்குள் அத்துமீறி சென்று தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் புகார் எழுந்த நிலையில், நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அதனையடுத்து அவருக்கு இன்று காலை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், ”ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கேவலமான விஷயம் நடந்ததில்லை. அதுமட்டுமல்லாது, குடித்துவிட்டு ஆட்சியர் வீட்டுக்கே சென்று ரகளை செய்திருக்கிறார். இந்தச் சம்பவம் ஜூலை மாதமே நடந்துள்ளது.

முதல் 6 மாதம் புதிய ஆட்சிக்கு ‘ஹனிமூன் பீரியட்’ என்பார்கள். இந்த ஆட்சியில் உள்ள அனைவரும் அதை அப்படியே புரிந்து கொண்டனர் போல. ஜூலை 31-ல் சம்பவம் நடந்துள்ளது. அப்போதே தலைமைச் செயலாளரிடம் பாதிக்கப்பட்ட ஆட்சியரும் புகார் அளித்திருக்கிறார்கள். ஆனால், அவரோ வேறு மாவட்டத்துக்கு மாறுதல் வாங்கிச் செல்ல சொல்லியிருக்கிறார். 116 நாட்கள் கடந்து தான் இச்சம்பவத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் நீதிமன்ற தலையீட்டுக்குப் பின்னர். அப்படியென்றால் அதுவரை முதல்வர் தூங்கிக் கொண்டிருந்தாரா?

இதனிடையே ‘தவெக வர்ச்சுவல் வாரியர்ஸ்’ இணையவெளியில் பாதிக்கப்பட்ட நபரையே தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்று நான் டிஜிபியிடம் கொடுத்த புகாரில், மாவட்ட ஆட்சியரிடம் தலைமைச் செயலாளர் சமரசம் பேசியிருக்கிறார். அதனால் அவரையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளேன்.

Advertisement

தலைமைச் செயலாளர், ஆட்சியர் புகார் குறித்து முதல்வரிடம் சொன்னாரா இல்லையா? அப்படிச் சொல்லியிருந்தால் முதல்வர் ஏன் 116 நாட்கள் அமைதியாக இருக்கிறார்?

தமிழக மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு ருக்கிறார்கள். இப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லை என்று அமைச்சர் ஒருவர் சொன்னார். அவர் இப்போது என்ன செய்யப்போகிறார்.

இந்தச் சம்பவம் மட்டுமல்லாது, இந்த ஆட்சியில் இன்னொன்றும் நடந்ததும். துணை சபாநாயகர், மனு கொடுக்க வந்தவரை அடித்தார். அந்தச் சம்பவத்தின் மீது 16 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது ‘தூங்குமூஞ்சி முதல்வர்’ எழுந்து சட்டம் ஒழுங்கு மீறல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்எல்ஏ, துணை சபாநாயகரை கைது செய்ய வேண்டும்.

ஆனால், இந்த அரசு அவர்களைக் காப்பாற்றுவதில் தான் இருக்கிறது எனத் தோன்றுகிறது. இந்த அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அதனால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

இந்த மாதிரி ஒரு குற்றச்சாட்டு இந்தியாவில் எந்த மாநிலத்திலேயே நடந்துள்ளதா? மாற்றம் கொண்டு வருவேன் என்றார்களே! இதுதான் அவர்கள் கொண்டு வந்த மாற்றமா?” என்று உதயநிதி பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply