தேவை மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்ப கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் வெவ்வேறு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் கூறினார்.
தேசிய கல்வி நாள், தேசிய உருது நாள் விழா சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது: கல்லூரி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அவர்களுக்கு அதிநவீன மடிக்கணினிகளை மிக விரைவில் வழங்குவதற்காக தமிழக முதல்வர் விஜய் ரூ. 2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுவிட்டது. மாணவர்களின் படிப்புத் துறைக்கு ஏற்ப அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் வெவ்வேறு கட்டமைப்புத் திறன்களைக் (Configuration) கொண்ட மடிக்கணினிகள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட உள்ளன.
அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களின் தேவைகளுக்கு ஒரு விதமான கட்டமைப்பும், பொறியியல் மாணவர்களின் பயன்பாட்டுக்குத் தகுந்தவாறு மேம்பட்ட மற்றொரு விதமான கட்டமைப்பும் கொண்ட மடிக்கணினிகளாக வழங்கப்படும்.
இவ்வாறு மாணவர்களுக்கு இடையே வெவ்வேறு வகையான மடிக்கணினிகள் வழங்கப்படுவது எந்தவொரு பாகுபாடும் காட்டுவதற்காக அல்ல. மாறாக, பொறியியல் படிப்புக்கான சாஃப்ட்வேர் தேவைகளும், கலை மற்றும் அறிவியல் படிப்புக்கான சாஃப்ட்வேர் தேவைகளும் மாறுபடும். இவ்வாறு அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
உருது கவிஞர்கள் மற்றும் உருது பள்ளிகளில் 30 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு அமைச்சர் நினைவுப்பரிசு வழங்கினார்.
இந்த விழாவில் தமிழ்நாடு மாநில உருது கழகத் துணைத் தலைவர் முகமது நயீமூர் ரகுமான், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் கே.நவாஸ் கனி, முன்னாள் எம்எல்ஏ கே.எம்.அபுபக்கர், சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் பேராசிரியர் எஸ்.ஆம்ஸ்ட்ராங், பதிவாளர் ரீட்டா ஜான் மற்றும் உருது ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

