தீபாவளி நாளன்று பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக 2 மாத குழந்தை, கருவுற்ற பெண் உள்பட 8 பேரின் கண்கள் அகற்றப்பட்டதாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிறன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது பலரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 464 பேர் பட்டாசு விபத்துகளால், கண்ணில் காயம் ஏற்பட்டு, அரவிந்த் கண் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக மருத்துவர்கள் டாக்டர் உஷா மற்றும் கிம் ஆகியோர் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய மருத்துவர் உஷா, தீ விபத்துகளில் 52 சதவிகிதம் குழந்தைகளும், 48 சதவிகிதம் வேடிக்கை பார்த்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மருத்துவர் கிம் கூறுகையில் பட்டாசு வெடிக்கும் பொழுது குழந்தைகளுடன் பெற்றோர்கள் இல்லாத நிலையில்தான் விபத்துக்கள் ஏற்படுகிறது என்றார்.

