வங்கக் கடலில் நவ.13-ம் தேதி உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, 15-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக நவ.13-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, 14-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், 15-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும்.
மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 900 மீட்டர் உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இவை காரணமாக தமிழகத்தில் நாளை (நவ.12) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் இதர வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
13-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவ.12) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தலா 3 செமீ, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
“வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. எனவே, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கிழக்குக் கடற்பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள, மீன்பிடிப் படகுகள் அனைத்தும் நாளை (நவ.12) இரவுக்குள் கரைக்குத் திரும்ப வேண்டும்.
அப்படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக மீன்பிடித் துறைமுகங்களுக்குத் திரும்பி, பாதுகாப்பாக நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். நவ.13-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிப் படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படாது.
தினசரி கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் நாட்டுப்படகுகள் உள்ளிட்ட அனைத்து வகையான மீன்பிடிப் படகுகளும் இன்றைக்குள் கரைக்குத் திரும்பி, தங்களது வழக்கமான மீன் இறங்குதளங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட வேண்டும்” என்று மீன்வளத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

