“காவிரி விவகாரத்தில் இன உணர்வாளர்களை தூண்டிவிட்டு பந்த்” – கர்நாடகா முதல்வர் மீது பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

Priya
720 Views
2 Min Read

“காவிரி விவகாரம் தொடர்பாக இன உணர்வாளர்களை தூண்டிவிட்டு கர்நாடகாவில் முழு அடைப்பு என்கிற பெயரில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தமிழக மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளார்,” என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: கர்நாடகாவில் அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. தமிழகத்தில் காவிரி டெல்டா வறண்ட நிலையில் காணப்படுகிறது. குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகள் சம்பாவுக்கு தண்ணீர் இல்லாமல் மனமுடைந்து செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இந்நிலையில், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு ஒரு டிஎம்சி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட ஆணையத்துக்கு தமிழகம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. அதனை ஏற்றுகொண்ட காவிரி மேலாண்மை ஆணையமும், உடனடியாக தண்ணீரை விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் உச்ச நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை நிறைவேற்ற மறுப்பதுடன், அவரது தூண்டுதலின் பேரில் கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்கவில்லை.

ஒட்டுமொத்தமாக கர்நாடகாவில் உள்ள பேராசிரியர்கள், நீரியியல் ஆய்வாளர்கள் மற்றும் விவசாயிகள் மேகேகதாட்டு அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், வாட்டாள் நாகராஜ் போன்ற இன உணர்வாளர்களை தூண்டி விட்டு, கர்நாடகாவில் முழு அடைப்பு என்கிற பெயரில் தமிழக மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளார்.

இன்றைய தினம், தமிழக வாகனங்கள் கர்நாடகாவுக்குள் அனுமதிக்கவில்லை. ஓசூரிலிருந்து தொழிலாளர்கள் சென்று வருவதற்கு பேருந்து வசதி அனுமதிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதிக்கும் நோக்கோடு கர்நாடக முதல்வர் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக முதல்வர் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில், முதல்வர் டி.கே.சிவகுமாரின் சட்டவிரோத செயல் குறித்து வழக்கு தொடர வேண்டும். தொடர்ந்து சட்டத்துக்கு உட்பட்டு, தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். உடனடியாக மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கர்நாடக முழு அடைப்புக்கு தடை விதிக்க வேண்டும். கர்நாடகா சார்ந்த மத்திய அமைச்சர்கள் அனைத்துக் கட்சி கூட்டங்களில் பங்கேற்பதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்.

இதே நிலை தொடர்ந்தால், தமிழக விவசாயிகள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குடிபுகும் போராட்டத்தில் ஈடுபடுவோம், காமராஜர் அடிக்கல் நாட்டிய ராசி மணல் அணை கட்டுமானப் பணியை தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள முன்வர வேண்டும். அதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply