அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர், செவிலியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று, சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜை சந்தித்து அரசு மருத்துவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
சென்னை, தலைமை செயலகத்தில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜை அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தலைமையில், அரசு மருத்துவர்கள் சந்தித்து பேசினர். அப்போது, சுகாதாரத்துறை தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை அமைச்சரிடம் வழங்கினர்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: சுகாதாரத் துறையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. சுகாதாரக் குறியீடுகளான மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்து வருகின்றோம்.
இருப்பினும், தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே குறைவான ஊதியம் தந்து அவமானப்படுத்தி வருவது வேதனையளிக்கிறது. இந்த கோரிக்கைக்காக கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம்.
அதுவும், சுதந்திர இந்தியாவில் அரசு மருத்துவர்களை தங்கள் ஊதியத்துக்காக தொடர்ந்து போராட வைக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது. அதனால், அரசு மருத்துவர்களுக்கு அரசானை 354-ன்படி ஊதியம் வழங்க வேண்டும்.
கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணை வழங்க வேண்டும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 400 பல் மருத்துவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மருத்துவர், செவிலியர் பணியிடங்களை அதிகரிக்கப்படாததால், மருத்துவர் மட்டுமன்றி, மக்களுமே பாதிக்கப்படுகின்றனர்.
அதனால், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பட மருத்துவர், செவிலியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பல் மருத்துவர் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
கடந்த திமுக ஆட்சியில் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், பாதயாத்திரையை முன்னெடுத்து சென்ற மருத்துவர் சங்க தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளைக்கு தரப்பட்ட 17-பி குற்ற குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

