‘திமுகவில் விரைவில் 110 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்’ என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்த நிலையில் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையாகச் சமர்ப்பித்தனர்.
அதன் அடிப்படையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில், “திமுக கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்த்தப்படுகிறது. மாவட்டச் செயலாளரின் அதிகபட்ச வயது 70-ஆக நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு மாவட்டச் செயலாளர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே அந்தப் பொறுப்பில் இருக்க முடியும்” என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் திமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மறுசீரமைப்புக் குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில், ‘அடுத்ததாக வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பாக திமுக உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ எனத் திட்டமிடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திமுக தொண்டர்களைச் சோர்வடையச் செய்திருந்தன. அதன் பிறகு ஆளுங்கட்சியினர் எங்கள் தலைவர்களைக் கைது செய்தது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது போன்றவை தொண்டர்களிடத்தில் புதிய உத்வேகத்தைக் கொடுத்தன.
இதனால் திமுகவினர் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் கடுமையாக பணியாற்றினார். அதன் வெளிப்பாடுதான் இடைத்தேர்தலில் மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றது. இன்னும் சற்று கூடுதலாக உழைத்தால் நிச்சயம் தவெகவை வீழ்த்திவிடலாம் என்ற நம்பிக்கை திமுக தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இப்படியான சூழலில்தான் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து திமுக மறுசீரமைப்புக் குழுவினருடன் உதயநிதி நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, “மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்த வேண்டும் எனச் சில மாவட்டச் செயலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்” என மறுசீரமைப்புக் குழுவினர் உதயநிதியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்துப் பேசிய அவர், “விரைவில் உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதற்கு முன்பு மாவட்டப் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். விரைவில் ஒன்றியம், பேரூர், வட்டம், பகுதி என வாரியாகப் பிரித்து திமுக தலைமைக்கு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். இதில் தவறுகள் ஏதும் இருக்கும் பட்சத்தில், கட்சி சாராத ஒரு அமைப்பைக் கொண்டு அது சீர்திருத்தப்படும்.
இடைத்தேர்தலுக்கு முன்பாகவே இந்த உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்து, திமுக தன்னுடைய அனைத்து உட்கட்சிப் பணிகளையும் நிறைவு செய்து இடைத்தேர்தலுக்குத் தயாராக வேண்டும். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்” எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

