ஆம்னி பேருந்து டிக்கெட் முன்பதிவுக்கு புதிய தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் சேவை வழங்குவதே இதன் நோக்கம் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மூலம் தினமும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பேருந்துகளுக்கான டிக்கெட்களை அந்தந்த பேருந்து நிறுவனங்களின் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.
அனைத்து நிறுவனங்களின் பேருந்துகளுக்கும் ஒரே தளத்தில் முன்பதிவு செய்யும் வகையில் தனியார் செயலிகளும் உள்ளன. பண்டிகை காலத்தில் இந்த செயலிகளில் அதிக கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.
மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் இந்த தளங்களுக்கு அதிக கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் முன்னெடுப்பான ஓஎன்டிசி எனப்படும் திறந்த டிஜிட்டல் வர்த்தக வலையமைப்புடன் ‘ரோமி மொபிலிட்டி’ நிறுவனமும், தமிழகத்தின் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களும் இணைந்து ‘ரோமி’ (Roamie) என்ற புதிய பேருந்து டிக்கெட் முன்பதிவு இணையதளம் மற்றும் செயலியை (www.roamie.co.in) உருவாக்கியுள்ளனர்.
இதன் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. புதிய முன்பதிவு தளம் குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் சேவை வழங்கும் நோக்கில் ‘ரோமி’ தளம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்தளத்தில் 100-க்கும் மேற்பட்ட பேருந்து உரிமையாளர்கள், 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள், 1,000-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் உள்ளன.
ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்கள் மூலம் மேலும் பல உரிமையாளர்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
இணையவழி டிக்கெட் விற்பனைக்காக முன்பதிவு தளங்களை சார்ந்திருக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கு கமிஷன் ஒரு முக்கியச் செலவாக உள்ளது.
இந்த செலவை குறைத்து, ஒவ்வொரு டிக்கெட்டிலும் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வருவாயை மேம்படுத்த இது உதவும். செலவைக் குறைத்து, அதன் பயனை பயணிகளுக்கும் வழங்குவதே இதன் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

