தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கைப் பராமரிப்பதில் தவெக அரசு முழுமையாகத் தோல்வியடைந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது திரைப்படக் காட்சிகளையும் மிஞ்சும் வகையில் தமிழகத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. செஞ்சி பகுதியில் சிறுமி ஒருவர் பல நாட்களாகக் காணாமல் போயுள்ள நிலையில், இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல், பச்சாயில் ஒரு குழந்தை காணாமல் போயுள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ரவுடிகள் வெட்டிக் கொல்லப்படும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. சிறையிலிருந்து 17 பேர் தப்பிச் சென்றுள்ளனர். சிறை மரணங்கள், காவல் மரணங்கள், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. வெளியே செல்லும் பெண்களுக்கும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. தூத்துக்குடியில் பெண் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விலை உயர்வு குறித்துக் கருத்துத் தெரிவித்ததற்காக ஒருவர் காரணமின்றிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் காவல்துறையினர் தவறு செய்துள்ளதாகச் சட்டத்துறை அமைச்சர் தற்போது கூறுகிறார். அப்படியென்றால், இது யாருடைய ஆட்சி? தமிழகத்தில் விஜய்யின் ஆட்சியா, தவெக ஆட்சியா, அல்லது ஜனநாயக ஆட்சியா? காவல்துறையைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காவல்துறை தறிகெட்டு ஓடும் காட்டுக் குதிரையைப் போலச் செயல்படுகிறது. இந்த அரசின் கீழ் நிலவும் காவல்துறை செயல்பாடுகளால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மின்சாரத் துறையைப் பொறுத்தவரை, 2001 முதல் 2006 வரை நான் அமைச்சராக இருந்தபோது, தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றினோம். மின் உபரி மாநிலமாகவும் உருவாக்கினோம். ஆனால், தற்போது மின் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. முன்பு ரூ.5, ரூ.6, ரூ.7 என இருந்த கட்டணங்கள் தற்போது ரூ.21 ஆகவும், சில பிரிவுகளில் ரூ.37 மற்றும் ரூ.41 ஆகவும் உயர்ந்துள்ளன. இதில் என்ன நியாயம்?
அதேபோல், ஆவின் தயாரிப்புகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. தீபாவளிப் பரிசாக இனிப்புகள், கோவா உள்ளிட்ட அனைத்து பால் பொருட்களின் விலைகளையும் அரசு உயர்த்தியுள்ளது. ஆவின் பொருட்களின் விலை உயர்வே மக்களுக்கு இந்த அரசின் தீபாவளிப் பரிசாக அமைந்துள்ளது. இதுபோன்று இன்னும் பல விலை உயர்வுகள் தமிழக மக்களுக்காகக் காத்திருக்கின்றன என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

