வேலை தேடி சென்னைக்கு வரும் இளைஞர் அஜய் கார்த்தி, மிகக் குறைந்த வாடகையில் கிடைக்கும் ஒரு பெரிய வீட்டில் குடியேறுகிறார். பல ஆண்டுகளாக கொலை மற்றும் தற்கொலை சம்பவங்கள் நடந்ததால், அந்த வீட்டை அனைவரும் “பேய் வீடு” என்று அச்சத்துடன் பார்க்கிறார்கள். வீட்டின் உரிமையாளரான பாக்யராஜ் கடன் சுமையால் தவிப்பதை அறிந்த அஜய், அவருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அந்த வீட்டிலேயே தங்க முடிவு செய்கிறார்.
படத்தின் தொடக்கத்திலேயே அந்த வீட்டில் தங்கியிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரைக் கொன்றுவிட்டு தானும் தீ வைத்துக்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார். அதன்பிறகு பாக்யராஜும், அஜயும் இறந்துவிட்டதாக தெரிய வருகிறது. இந்த வழக்கை விசாரிக்க போலீஸ் அதிகாரியாக நட்டி வருகிறார். ஆனால் இறந்ததாக நினைக்கப்பட்ட அஜய் திடீரென உயிருடன் எழுந்து அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்கிறார். இதையடுத்து, அந்த வீட்டில் தொடர்ந்து மர்மமான சம்பவங்கள் ஏன் நடக்கின்றன? அங்கு சுற்றித் திரியும் ஆவிகளின் நோக்கம் என்ன? இந்த மர்மத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
அறிமுக நாயகனான அஜய் கார்த்தி தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். தைரியமான இளைஞனாக தொடங்கி, அமானுஷ்ய சம்பவங்களால் மனதளவில் பாதிக்கப்படும் மனிதராக மாறும் அவரது நடிப்பு இயல்பாக இருக்கிறது. பாக்யராஜின் கடைசி திரைப்படம் என்பதால், அவரது காட்சிகள் ரசிகர்களுக்கு கூடுதல் உணர்வை ஏற்படுத்துகின்றன. வழக்கம்போல எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் நட்டி, குறைந்த காட்சிகளிலேயே தனது அனுபவத்தை வெளிப்படுத்துகிறார். அஞ்சனா நேத்ரனும் தனது கதாபாத்திரத்தின் மூலம் கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமாகிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் ஆரம்பம் முதல் இறுதி வரை தொடரும் பதற்றமான சூழல்தான். தேவையில்லாமல் காதல், பாடல் போன்ற காட்சிகளை சேர்க்காமல், கதை சொல்ல வந்த விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. முதல் பாதியில் உருவாகும் திகிலும் மர்மமும் ரசிகர்களை ஈர்க்கிறது. இரண்டாம் பாதியில் அந்த வேகம் சற்று குறைந்தாலும், கிளைமாக்ஸை முடித்த விதம் திருப்தி அளிக்கிறது.
ரவி சக்தியின் ஒளிப்பதிவு இருள் சூழ்ந்த வீட்டின் மர்மமான சூழலை சிறப்பாக பதிவு செய்துள்ளது. மனோ ரமேஷனின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சியிலும் திகில் உணர்வை அதிகரிக்கிறது. ஒலி வடிவமைப்பும், எடிட்டிங்கும் படத்தின் பதற்றத்தை இறுதிவரை தக்க வைத்திருக்க உதவுகின்றன.
இயக்குநர் கல்யாண் கே. ஜெகன், வழக்கமான பேய் கதையை மர்மம் மற்றும் உணர்ச்சியுடன் சொல்ல முயற்சித்துள்ளார். சில இடங்களில் லாஜிக் குறைகளும், வசனங்களில் நாடகத்தன்மையும் தெரிந்தாலும், அவை படத்தின் மொத்த அனுபவத்தை பெரிதாக பாதிக்கவில்லை. சொல்ல வந்த விஷயத்தை இன்னும் தெளிவாகக் கூறியிருக்கலாம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
மொத்தத்தில், ‘டார்க்’ திகில், மர்மம் மற்றும் சஸ்பென்ஸை விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல திரையரங்கு அனுபவத்தை வழங்கும் படமாக அமைந்துள்ளது.

