சிவராஜ் குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’45’.
இந்தப் படத்தின் முன் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. அதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி, “சிவாண்ணாவின் ரசிகன் நான். அவர் மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தவர்; ஆனால், அதை வெளியில் எங்கும் காட்டிக்கொள்ள மாட்டார். அவர் பற்றி சமீபத்தில் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அவருக்கு கேன்சர் வந்தது. இப்படி ஒரு சூழ்நிலை வந்தால் எல்லோரும் உடைந்து விடுவோம், குடும்பத்தோடு இருக்க ஆசைப்படுவோம். ஆனால், சிவாண்ணா தயாரிப்பாளரை அழைத்து, ‘மீதமுள்ள ஷூட்டிங்கை முடித்து விடுங்கள், டப்பிங் எடுத்துவிடுங்கள்’ என்று கூறியுள்ளார். அவரின் அர்ப்பணிப்பிற்கும் நேர்மைக்கும் தலை வணங்குகிறேன்.
உபேந்திராவுடன் ஒரு படத்தில் வேலை செய்துள்ளேன். அவர் இயக்கத்திற்கு நான் ரசிகன். ராஜ் பி ஷெட்டியின் சமீபத்திய படங்கள் அற்புதமாக இருக்கின்றன. அவர் தமிழில் படம் செய்ய வேண்டும். 20 வருடங்கள் இசையமைப்பாளராக இருந்த அர்ஜுன் ஜான்யா படத்தை மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். டிரெய்லர் பார்த்தேன், அட்டகாசமாக இருந்தது. நிறைய கிராஃபிக்ஸ் காட்சிகள் இருந்தன. படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்” என்றார்.
நடிகர் சிவராஜ் குமார், “நான் விஜய் ஆண்டனியின் ரசிகன். அவர், சினிமாவில் எல்லா வேலையும் செய்துள்ளார். அவருடைய ‘பிச்சைக்காரன்’ படத்தின் ரீமேக் வாய்ப்பு எனக்கு வந்தது; ஆனால், அதை மிஸ் செய்து விட்டேன். மீண்டும் அவரின் வேறு படத்தில் நடிக்கக் காத்திருக்கிறேன். ரமேஷ் ரெட்டிக்கு என் நன்றி. அறிமுக இயக்குநருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு தந்துள்ளார். நான் தான் முதலில் கதை கேட்டேன்; என்னை நம்பி பெரிய செலவு செய்துள்ளார்.
அர்ஜுன் ஜான்யா, இப்படத்தில் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். என்னிடம் கதை சொன்ன போது எல்லா கேரக்டர்களையும் நடித்தே காட்டிவிட்டார். இப்போது இயக்குநராகியுள்ளார்; விரைவில் நடிகராக ஆகிவிடுவார். உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை; அவர்தான் எனக்கு பிரேக் தந்தார். அவர், அட்டகாசமான கலைஞன். ராஜ் பி ஷெட்டி, சமீபமாக கலக்கி வருகிறார். அவர் நல்ல இயக்குநர், நல்ல எழுத்தாளர். எங்கள் மூன்று பேரின் கெமிஸ்ட்ரி படத்தில் அட்டகாசமாக வந்துள்ளது. இது ஒரு தனி உலகம்; படம் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள ‘45’ படத்தின் தமிழ்ப்பதிப்பு, வருகிற 2026 ஜனவரி 1-ம் தேதி வெளியாகிறது. AGS Entertainment நிறுவனம், இப்படத்தினை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

