நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் நான் பேசிக்கொண்டிருந்த போது மைக்கை பறிப்பதுதான் ஜனநாயகமா? என்று நடிகை சனம் ஷெட்டி கேள்வி எழுப்பி உள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நடிகை சனம் ஷெட்டி கலந்து கொண்டு பேசினார்.
“இது மாணவர்களுக்காக மாணவர்கள் நடத்தும் போராட்டம். பொது மக்களில் ஒருவராக இதில் நான் பங்கேற்கிறேன். இங்கு எனக்கு முன்பு பேசியவர்களின் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை. இது மாணவர்களின் போராட்டம். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.
இந்த மேடையை அரசியல் சார்ந்து பயன்படுத்துபவர்கள் தான் கோமாளிகள். நாம் கிடையாது. நானும் கிடையாது. நான் தளபதியின் (விஜய்) தீவிர ரசிகர். நேற்றுதான் முதல் நாள் முதல் காட்சி பார்த்திருந்தேன். (அப்போது அவரது பேச்சுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குரல் எழுப்பினர். இருப்பினும் தொடர்ந்து சனம் ஷெட்டி பேசினார்)
இது ஜனநாயகம் அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது. இப்போது புரிகிறதா நான் யார் குறித்து பேசினேன் என்று. மாணவர்களுக்காக நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க நான் வந்துள்ளேன். யாரும் சொல்லி இங்கு நான் வரவில்லை. நானாகவே வந்துள்ளேன்” என்று ஆவேசமாக நடிகை சனம் ஷெட்டி பேசினார்.
பின்னர் அவரிடமிருந்து மைக் வாங்கப்பட்டது. பின்னர் மேடையில் இருந்தவர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறினார்.
“மாணவர்கள் போராட்டம் என்று சொன்னார்கள். மைக்கில் நான் பேசிக்கொண்டிருந்த போது எனது மைக்கை பறித்தார்கள். இதுதான் அவர்களின் ஜனநாயகமா? இது மாணவர்களுக்காக நடைபெறும் போராட்டம். ஆனால், இங்கு தங்களது அரசியல் நிலைப்பாடு சார்ந்து போராடுகிறார்கள். பேசுவதற்கு கூட சுதந்திரம் தராதவர்கள். இங்கு நடைபெறும் போராட்டம் போலியானது. எனது கருத்தை மட்டும்தான் நான் பேச முடியும். ஒரு திரைப்படம் பார்த்தால் ஜோக்கரா?
மாணவர்கள் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். விளம்பரத்துக்காக சட்டப்பேரவை முன்பு போராட்டம் நடத்தினால் கைது செய்வார்கள். அனுமதி பெற்று போராட்டம் நடத்த எந்த தடையும் இல்லை” என்று செய்தியாளர்களிடம் சனம் ஷெட்டி தெரிவித்தார்.
போராட்டக்குழுவினர் விளக்கம்
யார் வேண்டுமானாலும் இங்கு வந்து பேசலாம் என்பது தான் போராட்டத்தில் பங்கேற்று உள்ளவர்களின் கருத்து. அதற்கான உரிமையும், சுதந்திரமும் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நாம் என்ன எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் பொருள். ஆனால், அவர் வெளியில் சென்று பேட்டி கொடுத்த போது ‘இது ஜனநாயக கூட்டமே இல்லை’ என்று சனம் ஷெட்டி சொல்லி உள்ளார். அவரை வெளியேற்றியதாகவும், மைக்கை பறித்ததாகவும் சொல்லியுள்ளார். அதற்கான விளக்கம் அளிக்கிறோம் என்றுதான் அவரிடம் சொன்னோம். இது நல்ல காரணத்துக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் என்று போராட்டக்குழுவினர் விளக்கம் அளித்தனர்.

