கேரளாவின் அடர்ந்த வனப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சுனில், யானைகளை வேட்டையாடி அவற்றின் தந்தங்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் கொடூரமான கடத்தல் கும்பல் தலைவனாக செயல்படுகிறார். தனது சட்டவிரோத தொழிலுக்காக பழங்குடியின மக்களை மிரட்டி வேலை வாங்குவதோடு, எதிர்ப்பவர்களை இரக்கமின்றி அழித்துவிடுகிறார்.
இதற்கிடையில் சுனிலின் கடத்தல் தொழிலுக்கு போட்டியாக செயல்படும் கபீர் துகான், காவல்துறையின் உதவியுடன் பல கோடி மதிப்புள்ள தந்தங்களை கைப்பற்றுகிறார். போலீசாரின் வசம் இருக்கும் அந்த தந்தங்களை மீட்க சுனில், துணிச்சலான மற்றும் திறமையான ஆண்டனி வர்கீஸின் உதவியை நாடுகிறார். போலீசாரையே ஏமாற்றி தந்தங்களை மீட்டுத் தரும் ஆண்டனி, விரைவில் சுனிலின் வலதுகரமாக மாறுகிறார்.
ஆரம்பத்தில் சுனிலுடன் இணைந்து பல சட்டவிரோத செயல்களிலும், வன்முறை சம்பவங்களிலும் ஈடுபடும் அவர், பின்னர் சுனிலின் கொடூரமான செயல்களையும் பழங்குடியின மக்கள்மீது நடைபெறும் அநியாயங்களையும் நேரில் காண்கிறார். இதனால் அவருக்குள் மாற்றம் ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் சுனிலின் ஆட்சிக்கு எதிராகவே ஆண்டனி குரல் கொடுக்க தொடங்குகிறார். இதனால் ஆத்திரமடையும் சுனில், தனது எதிரியான கபீர் துகானுடன் கைகோர்த்து ஆண்டனியை அழிக்க திட்டமிடுகிறார். இதையடுத்து பழங்குடியின மக்களை ஒன்றிணைத்து சுனில் மற்றும் அவரது கூட்டத்தினருக்கு எதிராக போராட ஆண்டனி முடிவு செய்கிறார். இந்த மோதலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
முழுக்க முழுக்க அதிரடி மற்றும் கமர்ஷியல் அம்சங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், ஆரம்பம் முதல் இறுதி வரை ஆக்ஷன் காட்சிகளால் நிரம்பியுள்ளது. கதாநாயகனாக நடித்துள்ள ஆண்டனி வர்கீஸ் தனது இயல்பான நடிப்பாலும், அதிரடி காட்சிகளிலும் சிறப்பாக கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அவரது திரை ஆளுமை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
வில்லனாக வரும் சுனில், கொடூரமான கும்பல் தலைவனின் கதாபாத்திரத்தை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
கபீர் துகான் தனது ஸ்டைலான வில்லன் தோற்றத்தால் கவனம் பெறுகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் துஷாரா விஜயன், ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் வரும் லோகேஷ் கனகராஜின் வருகையும் ரசிகர்களை கவர்கிறது. மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை அளித்துள்ளனர்.
ரேனாடைவின் ஒளிப்பதிவு படத்தின் முக்கிய பலங்களில் ஒன்றாக திகழ்கிறது. வனப்பகுதிகளையும் ஆக்ஷன் காட்சிகளையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளார். ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்தின் அதிரடி காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரது இசை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இயக்குநர் பவுல் ஜார்ஜ், யானை தந்தக் கடத்தல் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு ஒரு வணிக ரீதியான ஆக்ஷன் படத்தை உருவாக்கியிருக்கிறார். படத்தின் மேக்கிங், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாக இருந்தாலும், திரைக்கதையில் இன்னும் அதிக சுவாரஸ்யம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் இடம்பெற்றிருந்தால் படம் மேலும் வலுவாக அமைந்திருக்கும். சில இடங்களில் அளவுக்கு மீறிய பில்டப் மற்றும் தொடர்ச்சியான ஆக்ஷன் காட்சிகள் சற்று அயர்ச்சியை ஏற்படுத்தினாலும், அதிரடி பட ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது.

