திருச்சி, நாமக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இன்று திருச்சி, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் எனக் கணித்துள்ளது.
அதேபோல, நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும், திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தஞ்சாவூர், தருமபுரி, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவித்துள்ள வானிலை மையம், அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வரும் நிலையில், 13 இடங்களில் நேற்று சதம் அடித்தது. அதிகபட்சமாக திருச்சியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வாட்டியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், மதுரை மாநகரம் ஆகிய இடங்களில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை, சென்னை மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும் பதிவானது.
திருத்தணியில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வாட்டிய நிலையில், ஈரோடு, கரூர் பரமத்தி, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர், சென்னை நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களிலும் வெயில் சதம் அடித்தது. இந்நிலையில், வரும் நாட்களில் வடமேற்கு மாவட்டங்களில் வெயில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை மைய இயக்குநர் துரை நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். நடப்பு ஆண்டு சென்னையில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகி இருப்பதாகவும் துரை தெரிவித்தார்.

