கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீஸ் நேரில் சம்மன்

Priya
1 View
2 Min Read

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷிடம் போலீஸார் இன்று காலை நேரில் சம்மன் வழங்கினர். மேலும், அவரது அலுவலகம் முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, ஆட்சியரின் இல்லத்துக்குள் அத்துமீறி சென்று தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ‘‘ஆபாச குறுஞ்செய்தி தொடர்பாக தேசிய மகளிர் ஆணையமும் அறிக்கை கோரியுள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண் ஆட்சியரின் கண்ணியம் மற்றும் மரியாதையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும். இதுதொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களைப் பத்திரப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, “இந்த விவகாரத்தை யாரும் தேவையில்லாமல் அரசியலாக்க கூடாது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போலீஸார் விரைவாக விசாரணை நடத்தி டிச.22-ம் தேதிக்குள் இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டார்.

அதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் புலன் விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்.பி. சிருஷ்டி சிங்கும், விசாரணையை கண்காணிக்கும் அதிகாரியாக நிர்வாக ஐ.ஜி. காமினியும் நியமிக்கப்பட்டனர்.

போலீஸ் சம்மன்:

இந்நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் அலுவலகம் முன் இன்று (நவ.25) காலை முதல் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

முன்னதாக, கையில் கோப்புகளுடன் வந்த காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கு சம்மன் வழங்கினார். அப்போது அவர், எம்எல்ஏவிடமும், அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்திவிட்டு மேலதிக விசாரணைக்கு ஆஜராகும்படி எம்எல்ஏ அருள் விக்னேஷிடம் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொருபுறம் அரசியல் அழுத்தங்களால் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply