“2047-க்குள் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய தொலைதூர கிராமங்களிலும் தரமான மருத்துவ வசதி அவசியம்” – ஆளுநர் வலியுறுத்தல்

Priya
915 Views
2 Min Read

தொலை​தூர கிராமங்​களில் வசிக்கும் ஏழை, எளிய மக்​களுக்​கும் தரமான மருத்​துவ வசதி​கள் கிடைப்​பதை உறு​தி​செய்ய வேண்​டும், மருத்​துவ ஆராய்ச்​சிகள் அடித்தட்டு மக்​களுக்​குப் பயனளிக்​கும் வகை​யில் அமைய வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்​திர விஸ்வ​நாத் அர்​லேகர் வலியுறுத்​தி​னார்.

செங்​கல்​பட்டு மாவட்​டம் காட்​டாங்​கொளத்​தூர் எஸ்​ஆர்​எம் மருத்து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை மற்​றும் ஆராய்ச்சி மையம் சார்​பில், தேசிய மருத்​துவ அறி​வியல் கழகத்​தின் 66-வது ஆண்டு மாநாடு மற்​றும் பட்​டமளிப்பு விழா​வான ‘நாம்​ஸ்​கான் 2026’ மாநாடு நடை​பெறுகிறது.

இந்த மாநாட்​டைத் தொடங்​கி​வைத்து தமிழக ஆளுநர் ராஜேந்​திர விஸ்வ​நாத் அர்​லேகர் பேசி​ய​தாவது: மருத்​து​வத் துறை​யின் ஆராய்ச்​சிகளும், ஆய்வக ஆய்​வு​களும் சமூகத்​தின் அடித்​தட்டு மக்​களுக்​குப் பயனளிக்க வேண்​டும். ஆண்​டுக்கு ஒரு​முறை மருத்துவ முகாம்​களை நடத்தி மருந்​துகளை வழங்​கு​வதுடன் நின்று​வி​டா​மல், கிராமங்​களுக்கே சென்று தொடர்ச்​சி​யான மருத்துவ வசதி​களை ஏற்​படுத்த வேண்​டும். மருத்​து​வத் தொழில்​நுட்​பங்​கள் மூலம் தொலை​தூரப் பகு​தி​களுக்​கும் சிகிச்சை வசதிகளைக் கொண்டு சேர்க்க வேண்​டும். மருந்​துகளைச் சார்ந்திருப்​ப​தைக் குறைப்​ப​தற்​கான வழிகளை​யும் கண்​டறிய வேண்​டும்.

நாட்​டின் தொலை​தூரக் கிராமங்​களில், மருத்​துவ வசதி​கள் கிடைக்​காத பகுதி மக்​களைச் சென்​றடைவதே அனைத்து ஆராய்ச்​சிகள் மற்​றும் திட்​டங்​களின் முதன்மை நோக்​க​மாக இருக்க வேண்​டும். தேசிய வளர்ச்சி என்​பது பொருளா​தார வளர்ச்சியை மட்​டும் குறிக்​காது. கல்​வி, கலை, கலாச்​சா​ரம், ஆன்மிகம், மருத்​து​வம் உள்​ளிட்ட அனைத்​துத் துறை​களி​லும் முழுமை​யான வளர்ச்சி அவசி​யம். மக்​களின் பங்​கேற்பு இன்றி சமூக, தேசிய வளர்ச்​சியை அடைய முடி​யாது. 2047-க்​குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்​று​வதற்​கு, கடைக்​கோடி கிராம மக்​களின் மருத்​து​வத் தேவை​களை​யும் கருத்​தில் கொண்டு திட்டங்​கள் வகுக்​கப்பட வேண்​டும். இவ்​வாறு ஆளுநர் பேசி​னார்.

பல்​துறை அணுகு​முறை: மாநாட்​டுக்​குத் தலைமை வகித்த எஸ்ஆர்​எம் அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பக் கல்வி நிறுவனத்தின் நிறு​வனர் வேந்​தர் டி.ஆர்​.​பாரிவேந்​தர் பேசுகையில், “அறி​வியல், தொழில்​நுட்​பத்​தின் ஒருங்​கிணைவு மூலம் ஆரோக்​கிய​மான எதிர்​காலத்தை உரு​வாக்​கு​வதற்​கான பல்துறை அணுகு​முறையை வலுப்​படுத்த எஸ்​ஆர்​எம் கல்வி நிறுவனம் சிறந்த தளமாகும். பல்​வேறு துறை​களின் அறிவை​யும் திறன்​களை​யும் ஒருங்​கிணைக்​கும் பல்​துறைப் பல்​கலைக்​ கழகமாக விளங்​கு​வ​தால், மருத்​து​வக் கல்வி மற்​றும் நோயாளர் பராமரிப்​பில் ஒருங்​கிணைந்த அணுகு​முறையை மேம்படுத்துவதற்கு ஏற்ற சூழல் உள்​ளது” என்​றார்.

அக்.8 முதல் 11-ம் தேதி வரை நடை​பெறும் மாநாட்​டில் 1,400-க்​கும் மேற்​பட்ட மருத்​துவ வல்​லுநர்​கள், ஆராய்ச்​சி​யாளர்​கள், சுகாதாரத் துறை நிபுணர்​கள் பங்​கேற்​கின்​றனர். மருத்​துவ ஆராய்ச்​சியை ஊக்​கு​வித்​தல், நவீன தொழில்​நுட்​பங்​களைச் சிகிச்​சை​யில் பயன்படுத்​துதல், மருத்​து​வக் கல்​வி​யின் தரத்தை மேம்​படுத்​துதல், கூட்டு ஆராய்ச்​சியை வலுப்​படுத்​துதல் ஆகியவை மாநாட்​டின் நோக்​கங்​களாகும்.

நுண்​ணு​யிர் எதிர்ப்​பு, CAR-T உயிரணுச் சிகிச்​சை, அரிய மரபணுக் கோளாறுகள், நீரிழிவு நோய் ஆராய்ச்​சி, பெருந்​தொற்​றுத் தடுப்​பு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்​ளிட்ட சமகால மருத்​து​வத் தலைப்​பு​களில் அமர்​வு​கள் நடை​பெறுகின்​றன. மருத்​துவ ஆராய்ச்சி​யின் முன்​னேற்​றங்​கள் அனைத்​துத் தரப்பு மக்களுக்கும் தரமான சிகிச்சை கிடைக்க உதவ வேண்​டும் என்பதே மாநாட்​டின் முக்​கிய நோக்​க​மாகும்.

தொடக்க விழா​வில் தேசிய மருத்​துவ அறி​வியல் கழகத் தலை​வர் டாக்​டர் திகம்​பர் பெஹே​ரா, இந்​திய தேசிய அறி​வியல் கழகத் தலை​வர் டாக்​டர் சேகர் சி.​மாண்​டே, தேசிய மருத்​துவ ஆணை​யத் தலை​வர் டாக்​டர் அபிஜாத் சேத், எஸ்​ஆர்​எம் கல்​விப் பிரிவு இணை வேந்​தர் டாக்​டர் பி.சத்​தி​ய ​நா​ராயணன், மா​நாட்டு ஒருங்கிணைப்புத்​ தலை​வர்​ டாக்​டர்​ ஆர்​.ஜெயந்​தி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply