இந்தியா முழுவதும் 100% நெட்வொர்க் கவரேஜ் வழங்கும் நோக்கில் 1,600 செயற்கைக்கோள்கள் மற்றும் 23 தரை நிலையங்களுடன் புதிய தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்க ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ, மொபைல் டவர்கள் மற்றும் ஃபைபர் கேபிள்களை மட்டுமே நம்பியிருக்காமல், செயற்கைக்கோள்கள் மூலம் தனது நெட்வொர்க் சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக, சுமார் 1,600 செயற்கைக்கோள்கள் மற்றும் இந்தியா முழுவதும் 23 தரை நிலையங்களைக் கொண்ட புதிய தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
6 லட்சம் கிராமங்கள்
டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 10-வது தொலைதொடர்பு மாநாட்டில் ஜியோ நிறுவனம் தனது செயற்கைக்கோள் இணைப்பு திட்டங்களை காட்சிப்படுத்தியது. வழக்கமான தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை உருவாக்குவது கடினமாக உள்ள இந்தியாவின் பகுதிகளை சென்றடைவதற்காக, தற்போதுள்ள தரைவழி வலையமைப்புடன் செயற்கைக்கோள்களையும் பயன்படுத்தும் நோக்குடன், இந்த திட்டத்தை அந்நிறுவனம் `இறையாண்மை செயற்கைக்கோள் இணைப்பு’ என்று முன்வைக்கிறது.
இந்த கலப்பு செயற்கைக்கோள்-தரை அமைப்பின் மூலம் 6 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள், நிலப்பரப்புகள் மற்றும் கடல் பகுதிகள் அனைத்தும் 100 சதவீத கவரேஜ் பெறும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தொலைதூர பகுதிகள், தீவுகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் இந்தச் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
`மேக் இன் இந்தியா’
தனித்தனி அமைப்பாக அல்லாமல், தனது தற்போதைய மொபைல் மற்றும் ஃபைபர் உள்கட்டமைப்புடன் இந்த செயற்கைக்கோள் வலையமைப்பை ஒருங்கிணைக்க ஜியோ திட்டமிட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், கிராமப்புறங்கள், விமானப் போக்குவரத்து, கடல்சார் துறை, அரசு, பாதுகாப்புத்துறை மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகள் ஆகியவற்றில் இந்த வலையமைப்பு பயன்படுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம், மத்திய அரசின் லட்சியமான ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு மற்றொரு முக்கிய மைல்கல்லாகவும், தொழில்நுட்ப தன்னிறைவு நோக்கில் ஒரு பெரிய முன்னேற்றமாகவும் கருதப்படுகிறது. ஜியோ நிறுவனம் பல்வேறு கட்டங்களாக இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி, அடுத்த ஆண்டு செப்டம்பரில் ஒரு சோதனை முயற்சியை நடத்தவும், 2030-க்குள் 400 முதல் 450 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவும் திட்டமிட்டுள்ளது. 2035-க்குள் முழு 1,600 செயற்கைக்கோள் தொகுப்பையும் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
எலான் மஸ்க் குற்றச்சாட்டு
இந்தியாவில் வணிகரீதியான செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்குவதற்கு தேவையான மீதமுள்ள ஒப்புதல்களுக்காக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இன்னும் காத்திருக்கும் வேளையில் ஜியோவின் இந்த திட்டம் வந்துள்ளது. இந்தியாவில் ஸ்டார்லிங்க் திட்டத்தை வரவிடாமல் சில செல்வந்தர்கள் தடுப்பதாக எலான் மஸ்க் நேற்று குற்றம் சாட்டி இருந்தார்.

