இங்கிலாந்து கவுண்ட்டியில் 177 ரன்களை குவித்த மயங்க் அகர்வால்

Priya
748 Views
2 Min Read

இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால், ரிவர்சைடு மைதானத்தில் வொர்செஸ்டர்ஷயருக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் டர்ஹாம் அணிக்காக 177 ரன்கள் விளாசி டிவிஷன் 2 சாம்பியனான டர்ஹாம் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார்.

கடந்த ஆண்டு ஹெடிங்லியில் நடைபெற்ற இதே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் யார்க்ஷயர் அணிக்காக 175 ரன்கள் எடுத்திருந்த மயங்க் அகர்வால், தற்போது டர்ஹாம் அணிக்காகவும் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்துள்ளார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் டர்ஹாம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 437 ரன்கள் குவித்திருந்தது. முழுமையான 5 பேட்டிங் போனஸ் புள்ளிகளைப் பெறுவதற்கு அந்த அணிக்கு இன்னும் 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஏற்கெனவே சாம்பியன் பட்டத்தை உறுதி செய்திருப்பதால் அந்தப் புள்ளிகள் அவர்களுக்கு பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை.

ஒரு கட்டத்தில் டர்ஹாம் அணி 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்ற தடுமாறிய நிலையில் பென் ஸ்டோக்ஸ், மயங்க் அகர்வால் இருவரும் ஆட்டத்தின் வேகத்தையே மாற்றினார். பென் ஸ்டோக்ஸுக்கு இணையாக மயங்க் அகர்வாலும் அதிரடியாக விளையாட, இருவரும் ஒருவருக்கொருவர் போட்டியிடுவது போல பவுண்டரிகளை விளாசினர்.

மதிய உணவு இடைவேளைக்கு முன்பும் பின்பும் 15.3 ஓவர்களில் இருவரும் இணைந்து 105 ரன்கள் சேர்த்தனர். இந்த கூட்டணியில் மயங்க் அகர்வால் 50 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஸ்டோக்ஸ் அதைவிட 39 பந்துகளில் அரைசதத்தை எட்டி ஆட்டமிழந்தார். இருவரது அதிரடியால் வொர்செஸ்டர்ஷயர் பந்துவீச்சு முற்றிலும் சிதைந்தது. குறிப்பாக கூட்டணியின் கடைசி அரை மணி நேரத்தில் டர்ஹாம் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை சரமாரியாக விளாசினர்.

தனது 19-வது பவுண்டரியை விளாசிய மயங்க் அகர்வால், டர்ஹாம் அணிக்காக தனது முதல் சதத்தை எடுத்தார். அந்த அணிக்காக அவர் விளையாடிய ஐந்தாவது இன்னிங்ஸிலேயே இந்த சாதனையை நிகழ்த்தினார். தென் ஆப்பிரிக்காவின் வளரும் நட்சத்திட்ரம் டேவிட் பெட்டிங்காமுக்கு மாற்று வீரராக சீசன் முடியும் வரை குறுகிய கால ஒப்பந்தத்தில் டர்ஹாம் அணியில் இணைந்த மயங்க், 156 நிமிடங்கள் களத்தில் நின்று 121 பந்துகளை எதிர்கொண்டார்.

சதத்தை கடந்த பின்னரும் மயங்க் அகர்வாலின் அதிரடி ஆட்டம் நிற்கவில்லை. ஆலி ராபின்சனுடன் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு மேலும் 149 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் டர்ஹாம் அணி முதல் நாளிலேயே 400 ரன்களை கடந்து, வொர்செஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான போட்டியில் வலுவான ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது.

இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடினார் அகர்வால், அனாவசியமாக அவர் ஒதுக்கப்பட்டார். 1488 டெஸ்ட் ரன்களை 41.33 என்ற சராசரியுடனும் 243 ரன்கள் என்ற தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோருடனும் 4 சதங்கள், 6 அரைசதங்கள் என்று ஓரளவுக்கு அவர் தொடக்க வீரராக நல்ல ஸ்திரத்தன்மையைக் கொடுத்தார். ஆனால் 21 டெஸ்ட் போட்டிகளுடன் அவரது டெஸ்ட் கரியர் அரைகுறையாக முடிந்தது துயரமே.

Share This Article
Leave a Comment

Leave a Reply