தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக மார்க்கஸ் ஆக்கர்மேன் 95, எய்டன் மார்க்ரம் 78, டேவிட் பெடிங்காம் 50 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. ஜோஷ் இங்லிஷ் 85, அலெக்ஸ் கேரி 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 125.1 ஓவர்களில் 429 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
தனது 2-வது சதத்தை விளாசிய ஜோஷ் இங்லிஷ் 135 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்த நிலையிலும், அலெக்ஸ் கேரி 168 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் சேர்த்த நிலையிலும் ஹார்மர் பந்தில் ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 287 பந்துகளை சந்தித்து 185 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 0, மிட்செல் ஸ்டார்க் 11, நேதன் லயன் 1, கூப்பர் கானொலி 29 ரன்களில் வெளியேறினர்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சைமன் ஹார்மர் 4, மார்கோ யான்சன் 3 விக்கெட்களை வீழ்த்தினர். காகிசோ ரபாடா, ஜெரால்டு கோட்ஸி, வியான் முல்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 100 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 47 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.

