இந்தியாவில் பொது விநியோகத் திட்டம் (PDS) மூலம் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பது, கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே அரிசி வாங்க முடிவது மற்றும் பொருட்களின் எடையில் துல்லியம் இல்லாமை போன்ற பல்வேறு சிரமங்களைப் பொதுமக்கள் அன்றாடம் சந்தித்து வருகின்றனர். இத்தகைய சவால்களுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியாவிலேயே முன்னோடி முயற்சியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தானிய விநியோக இயந்திரம் தொடங்கப்பட்டுள்ளது. ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ (Annapurna Grain ATM) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விநியோக மையம், ரேஷன் பொருட்களைப் பெறுவதில் ஒரு புதிய தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் அமைந்துள்ள பிர்கான் (Birgaon) பகுதியில் இந்த அதிநவீனத் திட்டம் முதற்கட்டமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள பயனாளிகள் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதைப் போல, எந்த நேரத்திலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாதாந்திர ரேஷன் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியும். சத்தீஸ்கர் மாநில அரசு எடுத்துள்ள இந்த முன்னோடி நடவடிக்கை, அம்மாநிலக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்குப் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ரேஷன் அரிசியைப் பெறுவது இந்த தானிய ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் ரேஷன் கடைகளுக்குச் சென்று நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. இயந்திரத்திற்குச் சென்று தங்களது ரேஷன் அட்டை எண்ணை உள்ளிட்டு, கைரேகை அல்லது பயோமெட்ரிக் (Biometric) பதிவு செய்தவுடன், கணினித் திரை அவர்களின் விவரங்களைச் சரிபார்க்கும். பயனாளியின் குடும்பத்திற்கு அந்த மாதத்திற்கு எவ்வளவு அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத் திரை தெளிவாகக் காட்டும்.
அதைத் தொடர்ந்து, பயனாளியின் கணக்கிற்கு ஒதுக்கப்பட்ட சரியான அளவு அரிசி எவ்வித மனிதத் தலையீடும் இன்றி தானியங்கி முறையில் துல்லியமாக எடைபோடப்பட்டு இயந்திரத்தில் இருந்து வெளியே வரும். இந்த ‘அன்னபூர்த்தி கிரெயின் ஏடிஎம்’ சுமார் 2,500 கிலோ அரிசியைச் ஒரே நேரத்தில் சேமித்து வைக்கும் பிரம்மாண்ட கொள்ளளவைக் கொண்டது. அரிசியை இயந்திரத்தில் நிரப்புவது முதல் பயனாளிகளுக்கு விநியோகிப்பது வரை அனைத்துக் கட்டங்களும் முற்றிலும் டிஜிட்டல் மற்றும் தானியங்கி மயமாக்கப்பட்டுள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இயந்திரம், எடைக் குறைவு மற்றும் போலிப் பதிவுகள் போன்ற முறைகேடுகளை முற்றிலுமாகத் தவிர்க்கிறது.
இந்த தானிய ஏடிஎம் திட்டமானது வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்லாமல், பெண் தொழில்முனைவோர் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஊக்குவிக்கும் ஒரு சமூக மையமாகவும் செயல்படுகிறது. ராய்ப்பூர் பிர்கான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த முதன்மை ஏடிஎம் மையத்தினை உள்ளூர் பெண்களைக் கொண்ட ‘ஜோதி மகளிர் சுயஉதவிக் குழு’ சிறப்பாக இயக்கி வருகிறது. பெண்களுக்கு நிர்வாகப் பொறுப்புகளையும் தொழில்நுட்பப் பயிற்சிகளையும் வழங்கி, அவர்களை இந்தச் சேவை அமைப்பின் மையப் புள்ளியாக மாற்றியிருப்பது சத்தீஸ்கர் அரசின் சமூகப் பங்களிப்பைப் பறைசாற்றுகிறது.
மேலும், உலகளாவிய அளவில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கமான ‘உலக உணவுத் திட்டம்’ (World Food Programme – WFP) இத்திட்டத்திற்கு முழுமையான தொழில்நுட்ப மற்றும் உத்தி சார்ந்த ஆதரவை அளித்து வருகிறது. ஏழை எளிய மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், விநியோக முறையை வெளிப்படைத்தன்மையுடன் மாற்றுவதிலும் உலக உணவுத் திட்டம் காட்டும் முனைப்பு, சத்தீஸ்கர்மாநிலத்தின் இந்த முயற்சிக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
வழக்கமான ரேஷன் கடைகள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயங்குவதால், தினக்கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், நெசவாளர்கள் மற்றும் பிற அன்றாடப் பணியாளர்கள் தங்களது ஒரு நாள் வேலையையோ அல்லது ஊதியத்தையோ இழந்துவிட்டு ரேஷன் பொருட்களை வாங்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால், 24 மணி நேரமும் தடையின்றி இயங்கும் இந்த ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ மூலம், தொழிலாளர்கள் தங்களது வேலை நேரம் முடிந்து இரவிலோ அல்லது அதிகாலை நேரத்திலோ கூட தங்களுக்குரிய அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதுமட்டுமன்றி, ரேஷன் கடைகளில் சில நேரங்களில் வெளிப்படைத்தன்மை இன்மை, எடை அளவில் தவறுகள் நடப்பது போன்ற புகார்கள் எழும். ஆனால், கணினிமயமாக்கப்பட்ட இந்த ஏடிஎம் முறையில் ஒரு கிராம் கூடக் குறையாமல் துல்லியமான எடையில் அரிசி வழங்கப்படுகிறது. இடைத்தரகர்களின் தலையீடு இல்லாததால், தகுதியான ஏழை எளிய மக்களுக்குச் சென்றடைய வேண்டிய உணவு தானியங்கள் எவ்விதப் புகாருமின்றிச் சென்றடைவது உறுதியாகிறது. சத்தீஸ்கர் அரசின் இந்த டிஜிட்டல் விநியோக முறை, பொது விநியோக அமைப்பில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களுக்குச் சிறந்த தீர்வாக அமைந்துள்ளது.

