உள்நாட்டில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்குத் தூக்கமில்லாத இரவுகளை பரிசளித்துள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தார்.
உ.பி. மாநில கிரேட்டர் நொய்டாவில் நேற்று நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: பாதுகாப்புத்துறைக்கான கருவிகள், தளவாடங்கள், ஆயுதங்கள் தயாரிப்பதில் இந்தியா தற்சார்பு நிலையை அடைந்து வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள், பாகிஸ்தானுக்கு தூக்கமில்லாத இரவுகளை தந்து கொண்டு இருக்கின்றன.
தற்போதைய மாற்றம் ஒரு நல்ல அறிகுறியாகும். உ.பி. மாநிலத்தில் குறிப்பாக அமேதியில் தயாரிக்கப்படும் ஏகே 203 ரக துப்பாக்கிகள், நக்சலைட்டுகள், தீவிரவாதிகள் என இருதரப்பினருக்கும் தூக்கமில்லாத இரவுகளை கொடுத்திருக்கின்றன.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்சி, சித்ரகூட், லக்னோ, ஆக்ரா, அலிகர், கான்பூர் ஆகிய பகுதிகளுக்கு முதலீடுகள் வந்து கொண்டு இருக்கின்றன. உலகளவில் நிகழும் பல்வேறு சூழல்களுக்கு மத்தியில் நம் நாடு பொருளாதாரத்தை வலுப்படுத்தி இருக்கிறது. ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்தியதற்கு பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கைகளே காரணம். பாரபட்ச பார்வை கொண்டவர்களால் இந்தியாவின் முன்னேற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியாது.
பல நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களால் ஏற்றுமதி திறன் பன்மடங்கு அதிகரித்துள்ளது. முதலீட்டுக்கு உகந்த சூழலை ஒரு மாநிலத்தில் உருவாக்குவதற்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பது மிக முக்கியமாகும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

