“காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்திய, சீன ஒத்துழைப்பு அவசியம்” – ஐநாவில் நேபாள பிரதமர் உரை

Priya
573 Views
1 Min Read

நேபாளம், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து, ‘இமயமலை காலநிலை மீள்தன்மை அமைப்பை’ (Himalayan Climate Resilience Mechanism) உருவாக்க வேண்டும் என்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர், புவி வெப்பமடைதலால் இமயமலையின் சூழலியல் கடுமையாகச் சீர்குலைந்து வருகிறது. காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்.

இந்து-குஷ் இமயமலைப் பகுதி சுமார் 200 கோடி மக்களின் வாழ்விடமாக உள்ளது. இது நேபாளத்தைத் தாண்டி பல நாடுகளுக்கு நீர், விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்தை வழங்கும் புவியின் மிக முக்கியமான உயிர்-ஆதாரம் ஆகும்.

காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க நேபாளம், இந்தியா மற்றும் சீனா இணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் செயற்கைக்கோள் தரவுகளைப் பகிர்வது, ஆபத்தான பனிப்பாறை ஏரிகளைக் கண்காணிப்பது, முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துவது மற்றும் பேரிடர் காலத்தில் எல்லை கடந்த உதவிகளை ஒருங்கிணைப்பது சாத்தியமாகும்.

பனிப்பாறை அடுக்குகள் உருகுவதால் பனி-பாறைச் சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படுகின்றன. இதனால் நேபாள-சீன எல்லைப்பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதோடு, வெள்ள நீர் இந்தியாவை நோக்கியும் பாய்ந்தது. நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,450-ஐ கடந்துள்ள நிலையில், 6,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா, சீனா, ஐ.நா சபை மற்றும் பிற நட்பு நாடுகள் உடனடியாக வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒருபுறம் இயற்கைச் சீற்றங்கள் ஏழை நாடுகளை அச்சுறுத்தும் வேளையில், மறுபுறம் உலகளாவிய விநியோகச் சங்கிலி நியாயமற்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு ஏழை மக்களைத் தண்டிக்கிறது.

புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தவும், இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் இத்தகைய கூட்டு முயற்சி உடனடியாகத் தேவைப்படுகிறது” இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply