“வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்விலும் மோடி அரசு அநீதி” – மாணிக்கம் தாகூர்

Priya
36 Views
3 Min Read

“நீட்தேர்வை தொடர்ந்து வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதி தேர்விலும் அநீதி நடக்கிறது” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்​தி​யக் குடிமக்​கள் மற்​றும் வெளி​நாடு வாழ் இந்தியர்கள் பலர் வெளி​நாட்​டு மருத்துவப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிக்கின்றனர். அங்கு பட்​டம் பெற்ற பிறகு, இந்​தி​யா​வில் அங்கீகரிக்​கப்​பட்ட மருத்​து​வ​ராகப் பணிபுரிய வேண்​டும் என்​றால், ‘எஃப்​.எம்​.ஜி.இ’ எனப்​படும் வெளி​நாட்டு மருத்​து​வப் பட்டதாரி​களுக்​கான தகு​தித் தேர்வை எழுத வேண்​டும்.

கடந்த ஜூன் 28-ம் தேதி நாடு முழு​வதும் இந்த ஆண்​டுக்​கான எஃப்.எம்.ஜி.இ தேர்வு நடை​பெற்​றது. இதற்​கான முடிவு​களைத் தேசிய மருத்​துவ அறி​வியல் தேர்​வு​கள் வாரி​யம் நேற்​று​முன்​தினம் அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிட்​டது. இத்​தேர்வை நாடு முழு​வ​தி​லுமிருந்து மொத்​தம் 37,448 மருத்​து​வப் பட்​ட​தா​ரி​கள் எழு​தி​யிருந்​தனர். ஆனால், அவர்​களில் வெறும் 4,635 பேர் மட்​டுமே (12.38%) தகுதி பெற்​றுள்​ளனர். கடந்த 3 ஆண்​டு​களில் நடந்த 6 தேர்வு​களில் இது​தான் மிகக் குறைந்த தேர்ச்சி விகிதம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், “நீட்தேர்வை தொடர்ந்து வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதி தேர்விலும் அநீதி நடக்கிறது” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நுழைவுத் தேர்வு என்ற பெயரில் ஏழை, நடுத்தர குடும்பங்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவை பாசிச மோடி அரசு சிதைத்து வருகிறது. எந்தவொரு தேர்வாக இருந்தாலும், அனைத்து தரப்பு மாணவர்களும் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், மோடி ஆட்சியில், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மன உளைச்சலையும், பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் பூதமாக நுழைவுத் தேர்வுகள் மாற்றப்பட்டுள்ளன.

மாணவர்களின் திறனை கண்டறிவதற்குப் பதிலாக, சமூக, பொருளாதார ரீதியாக, பின்தங்கிய மாணவர்களை கல்வியில் வெளியேற்றும் கருவியாக நுழைவுத் தேர்வை மோடி அரசு பயன்படுத்தி வருகிறது.

நீட் நுழைவுத் தேர்வை நடத்துவதில் மோடி அரசு செய்த குளறுபடிகளால், வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளால் மறுதேர்வு நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு, மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் மருத்துவம் பார்க்க தகுதித் தேர்வு எழுத வேண்டும். ஆண்டுக்கு இருமுறை நடக்கும் இந்த தேர்வை, ‘தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம்” நடத்துகிறது.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நீண்ட கேள்விகள், வீடியோ அடிப்படையிலான கேள்விகள், மருத்துவ செயல்முறை சார்ந்த கேள்விகள் என, தேர்வு முறையில் பெரும் மாற்றங்களை புகுத்தியதால், தேர்ச்சி விகிதம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் 12.78 சதவிகிதமாக குறைந்துள்ளது., 36,280 பேர் தேர்வு எழுதியதில், 4,635 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வீடியோ அடிப்படையிலான கேள்விகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய மாற்றங்களுக்கு தேர்வர்கள் தயாராக போதிய அவகாசம் அளித்திருக்க வேண்டும். ஆனால், தேர்வு நாளன்று விதிமுறைகளை மாற்றியுள்ளனர்.

இது மோடி அரசின் மேட்டுக்குடி, பண்ணையார் மனநிலையை காட்டுகிறது. கடன் வாங்கி வெளிநாட்டில் மருத்துவம் படித்த நம் பிள்ளைகளை, மருத்துவம் பார்க்க விடாமல் தடுப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மத்திய சுகாதாரத் துறை உடனடியாக ஒரு வெளிப்படையான மறுஆய்வை மேற்கொண்டு, இத்தேர்வுக்கான தகுதி மதிப்பெண் வரம்பை குறைக்க வேண்டும். மோடி அரசால் அநீதி இழைக்கப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும். அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க போராடும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply