தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பணப்பட்டுவாடா புகார்கள் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாகச் சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ (எ) ஆர். மனோகருக்கு ஆதரவாக, வாக்காளர்களுக்கு ரூ.10,000 மதிப்பிலான QR Code Token-கள் விநியோகிக்கப்படுவதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கின் பின்னணி
வக்கீல் கே. ரவீந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பங்களுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியைப் பயன்படுத்தி, தற்போது அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் க்யூ ஆர் கோடு (QR Code) மற்றும் வரிசை எண்கள் அடங்கிய டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னம் திரையில் தோன்றுகிறது. இது தேர்தல் நடத்தை விதிகளின் அப்பட்டமான மீறல்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் ஆணையத்தின் பதில்
இந்த மனு இன்று (ஏப்ரல் 17, 2026) தலைமை நீதிபதி சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிக்காரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே புகார் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிமுக வேட்பாளர் மற்றும் கட்சியினர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” எனப் பதிலளித்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவு
தேர்தல் ஆணையத்தின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் இந்த வழக்கை மேற்கொண்டு நடத்தத் தேவையில்லை எனக் கூறி முடித்து வைத்தனர். இதேபோல் திமுக வேட்பாளர்கள் ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்களை விநியோகிப்பதாகத் தொடரப்பட்ட மற்றொரு வழக்கையும் நீதிமன்றம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, துறைமுகம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் தங்களின் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

