சிங்கீதம் சீனிவாச ராவ் என்கிற பெயர் வணிக சினிமாவுக்கானது மட்டுமே அல்ல. கதைசொல்லல் கலையில் புதுமைகளுக்கான முகவரி. சினிமாவை ஒரு வெகுஜன வடிவமாக அதன் வணிகத் தளத்திலேயே வைத்து, அதை எந்த அளவுக்குப் பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் என்று துணிச்சலாகச் சிந்தித்து, அதைத் திரை மொழியில் கையாண்டு வெற்றியும் கண்டவர்!
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டு, கன்னட, தமிழ்த் திரையுலகங்களுக்கும் மறக்க முடியாத முத்திரைப் படங்களைத் தந்து, இந்தி வரையிலும் தனது திறமையை நிரூபித்தவர்.
அவருடைய பெயரைக் கேட்டதுமே 80 மற்றும் 90களில் பிறந்தவர்கள் ‘ராஜ பார்வை’ (1981), ‘பேசும் படம்’ (1987), ‘அபூர்வ சகோதரர்கள்’ (1989), ‘மைக்கேல் மதன காமராஜன்’ (1990) ஆகிய நான்கு படங்களை மறக்க முடியுமா என்று சிலிர்ப்பார்கள். சென்னையில் திரைப்பட உலகம் உயிர்ப்புடன் இயங்கும் வடபழனி பேருந்து நிலையத்துக்குப் பின்னால் அமைத்திருக்கிறது பாஸ்கர் காலனி. அங்கே வீடு கட்டிக் குடியேறி வாழ்ந்தபடி, தெலுங்குத் திரையுலகுக்குப் ‘புஷ்பக விமான’த்தில் கடந்த 50 ஆண்டுகளாகப் பறந்துகொண்டிருந்த மகத்தான படைப்பாளி.
தரமான தொடக்கம்: செப்டம்பர் 21, 1931இல் ஆந்திர மாநிலத்தின் கூடூர் நகரில் பிறந்த சிங்கீதம் சீனிவாச ராவ், ‘நீதி நிஜாயிதி’ (1972) என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ‘நகைச்சுவை’யை ஓர் ஆயுதமாகக் கொண்டு சமூக விமர்சனம் செய்தவர். முதல் படத்தை எழுதி இயக்கு வதற்கு முன்பு, இயக்குநர் எல்.வி.பிரசாத்திடம் உதவி இயக்குநராகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கியவர்.
தமிழில் அவரது தொடக்கம் பலருக்கு ஆச்சரியம் அளிக்கலாம். அவர் இரண்டாவதாக இயக்கியது நேரடித் தமிழ்ப் படம். பேரறிஞர் ராஜாஜியின் புகழ்பெற்ற சமூகச் சீர்திருத்த நாவல் ‘திக்கற்ற பார்வதி’. நாவலின் பெயரிலேயே அதைச்சிறந்த தழுவல் திரைப்படமாக எடுத்து, தாம் சமூகத்துக்கான இயக்குநர் என்பதைக் காட்டினார். பின்னர் 80களின் தொடக்கத்தில் அவர் ‘ராஜ பார்வை’யை நமக்குக் காட்டியபோது, ரசிகர்களுக்குக் காதல் பைத்தியமும் இசைப் பைத்தியமும் பிடித்தன.
சோதனை முயற்சிகளின் முன்னோடி சினிமா பிறந்தபோது பேசவில்லை. ஆனால், அது பேசத் தொடங்கியபோது சமூகக் கதைகளுக்கான சகாப்தம் முழுமையடைந்தது சிங்கீதம் சீனிவாச ராவ் போன்ற இயக்குநர்களால்தான். அவர் வசனங்களை, குறிப்பாக எள்ளல் வசனங்களைத் தன் படங்களில் ஒரு முக்கியக் கூறாகவே பயன்படுத்தினார்.
அப்படிப்பட்டவர் முழுநீள அவல நகைச்சுவை, கதாபாத்தி ரங்களின் நிச்சயமற்ற வாழ்க்கைத் திருப்பங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு சமூக விமர்சனச் சித்திரத்தை ஒரு வசனம்கூட இல்லாமல் எடுக்க முடியும் என்று நிரூபித்தார். ‘புஷ்பக விமானம்’ ஆகத் தெலுங்குத் தலைப்புடனும் ‘பேசும் படம்’ ஆகத்தமிழிலும் வெளியான அந்தப் படம், உள்ளூர் வணிக சினிமாவாக வசூலைக் குவித்த அதேநேரம், உலகப் படவிழாக்களில் பாராட்டுகளை அள்ளிக் குவித்தது.
மக்களால் கொண்டாடப்படும் ஒரு மாஸ் நாயகனுடைய உயரத்தில் பாதியைக் குறைத்துக் காட்டமுடியும் என முயன்று வெற்றி கண்டவர் சிங்கீதம். தமிழ் சினிமாவில் ‘குள்ள’ கமல்ஹாசன் என்கிற கற்பனையைத் தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியப்படுத்தி, ‘அபூர்வ சகோதரர்கள்’ மூலம் பிரமிக்க வைத்தார். தொடர்ந்து ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் நான்கு கமல்ஹாசன்களை வெவ்வேறு வட்டார வழக்கு, குணாதிசயங்களுடன் நிலைநிறுத்திக் காட்டி, தமிழ் சினிமாவுக்கு எக்காலத்துக்குமான ஒரு நகைச்சுவைக் காவியத்தைக் கொடுத்துவிட்டு அமைதி காத்தவர்.
காலப் பயணம்: கதைசொல்லலில் தன் காலத்தை மீறிப் பயணித்த இவரது எல்லையற்ற தேடலுக்கு, இந்திய அளவில் 3டி அனிமேஷன் முயற்சியாக வெளியான ‘காட்டன் மேரி’ (Son of Aladdin) படம் சான்று. கன்னடத் திரையுலகில் ராஜ்குமார் நடித்த ‘பாக்கியதா லக்ஷ்மி பாரம்மா’, ‘தேவதா மனுஷ்யா’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். கமர்ஷியல் ஹிட் கொடுக்கத் தெரிந்த அவர்தான் ‘ஆதித்யா 369′ (1991) என்கிற இந்தியாவின் முதல் காலப் பயணத் திரைப்படத்தைக் கொடுத்து, இந்திய சினிமா வரலாற்றில் இடம்பிடித்தார்.
94 வயது தள்ளாத முதுமையில் வீட்டிலிருந்த படியே வீடியோ திரையில் பார்த்து அவர் இயக்கிய படம் ‘சிங் – கீதம்’ (2026). கதைமாந்தர்கள் தங்களுடைய உரையாடலைப் பாடல்களாகவே பாடும் நிலை உருவானால் இசை, பாடல்களைக் கொண்டு கதை சொல்வது எப்படியிருக்கும் என்கிற சிறு ‘பொறி’யை, பெரும் தீயாக மாற்றிக் காட்டியிருக்கிறார். காலம் அவரையும் அவருடைய படங்களையும் என்றைக்கும் மறக்காது.

