மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன்: உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு

Priya
612 Views
2 Min Read

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையற்ற கல்விக்கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது.

விவாதத்துக்கு பதிலளி்த்து பேசியபோது அமைச்சர் பெ.விஸ்வநாதன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி ஊக்கு விப்புத் திட்டம் (சிஏஎஸ்) செப்.1-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப 6,000 உதவிப் பேராசிரியர்கள் 3 கட்டமாக நியமிக்கப்படுவர்.

கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு ரூ.35 ஆயிரமாகவும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையற்ற கல்விக்கடன் வழங்க ‘கல்வி உத்தரவாதத் திட்டம்’ செயல்படுத்தப்படும்.

விவசாய நிலம் 2 ஏக்கருக்கும் குறைவாக உள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கும், எஸ்சி, எஸ்டி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முதல் தலைமுறை மாணவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் முழு கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படும்.

மேலும், உயர்கல்வி பயிலும் 50 திருநர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி யுதவி வழங்கப்படும். அரசுக் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடியில் ‘பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும். நடப்பாண்டில் நாக் அங்கீகாரம் பெற்ற 10 அரசுக் கல்லூரிகள் தன்னாட்சி கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும்.

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினியியல் உட்பட வளரும் துறைகளில் பட்டப் படிப்புகளை வழங்கும் விதமாக அண்ணா பல்கலை. வளாகத்தில் ‘பெரியார் வளரும் தொழில்நுட்பங்களுக்கான நிறுவனம்’ நிறுவப்படும்.

மாணவர்களின் செயற்கைக்கோள் வடிவமைப்பு திட்டங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். தமிழகத்துக்கென பிரத்யேக அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கப்படும்.

அடிப்படை அறிவியல் பாடங்களில் சிறப்புமிக்க கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைப்பதற்காக ஒரு தனிச் சட்டம் இயற்றப்படும்.

அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ள 356 ஆண்டுகள் பழமையான ஆவணங்கள் ரூ.31 கோடியில் செயற்கை நுண்ணறிவு தேடல் வசதியுடன் மின்னுருவாக்கம் செய்யப்படும் என்பன உள்ளிட்ட 22 அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply