கோயில் பணியாளர்களுக்கு பொதுச் சம்பள தொகுப்பு ஏற்படுத்த அமைச்சர் ரமேஷிடம் வலியுறுத்தல்

Priya
701 Views
2 Min Read

கோயில் பணியாளர்களுக்கென பொதுச் சம்பள தொகுப்பு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷிடம் கோயில் பணியாளர்கள் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், கோயில் பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷிடம் மனு அளிக்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், சங்கத்தின் மாநிலத் தலைவர் பரணிதரன், பொதுச் செயலாளர் சு.தனசேகர், பொருளாளர் முருகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கடந்த ஜூலை 26-ம் தேதி நடைபெற்ற மாநில மாநாடு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், 15 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் அவர்கள் சமர்ப்பித்தனர்.

மனுவில், கோயில்களில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையான வீட்டு வாடகைப் படி மற்றும் நகர ஈட்டுப்படி ஆகியவற்றை சதவீத அடிப்படையில் உயர்த்தி வழங்க வேண்டும். 01.08.2016 முதல் 31.12.2019 வரையிலான காலகட்டத்தில் 5 ஆண்டுகள் பணி முடித்த தினக்கூலி மற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இது தொடர்பான நிதித்துறையின் பரிசீலனையை விரைவுபடுத்த வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி (W.P.No.16065/2026), ஓய்வுபெற்ற பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். மேலும், தமிழக அரசின் ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை கோயில் பணியாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

பெண் பணியாளர்களுக்கு முறைப்படுத்தப்பட்ட பணி நேரமும், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பும் அளிக்கப்பட வேண்டும். டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுகளில் கோயில் பணியாளர்களுக்கு 25 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 50 வயதைக் கடந்தவர்களுக்குப் பதவி உயர்வுக்கான துறைத் தேர்வுகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 10-க்கும் குறைவான பணியாளர்கள் உள்ள கோயில்களிலும் பணிக்கொடை வழங்க வேண்டும்.

கோயில் பணியாளர்களுக்கென பொதுச் சம்பளத் தொகுப்பை ஏற்படுத்தி, திருத்தப்பட்ட பணி விதிகளை விரைந்து வெளியிட வேண்டும். சங்கச் செயல்பாட்டுக்கு சென்னையில் அலுவலக இடம் மற்றும் கோயில் வாகனங்களுக்குப் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டறிந்த அமைச்சர் ரமேஷ், அவற்றை முறையாகப் பரிசீலித்து விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் உறுதி அளித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply