“எங்கள் இருவருக்கும் இருக்கின்ற ஒற்றுமைகள் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். எங்கள் இருவருக்கு அவ்வளவு நினைவுகள் உண்டு” என ஃபஹத் பாசில் உடனான நட்பு குறித்து நடிகர் சூர்யா பேசியுள்ளார்.
ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்துக்கான முன்வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடந்தது. அதில் சூர்யா கலந்து கொண்டு தனக்கும் ஃபஹத் பாசிலுக்குமான நட்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசும்போது, ‘‘இந்த மாலைப் பொழுதில் இவர்களுடன் இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இது ஒரு குடும்பம் போன்றது.
சினிமாவின் அழகே அது நம்மைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பதுதான். எஸ்.எஸ்.ராஜமவுலி தயாரிப்பில் ஃபஹத் பாசில் என்பதும் அப்படியான ஆச்சரியங்களில் ஒன்றுதான். இந்தப் படத்தின் கதையும் யாரும் எதிர்பார்க்காத ஆச்சரியம்தான். படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஃபஹத் என்னை அண்ணா எனச் சொல்லிவிட்டார். நாங்கள் இருவரும் அவ்வளவு பேசியிருக்கிறோம். நிறைய நேரம் செலவழித்திருக்கிறோம். காலையில், மதியம், மாலை, பின் மாலை, நடு இரவு என விடிய விடிய நாங்கள் பேசியிருக்கிறோம்.
எங்கள் இருவருக்கும் நிறைய நினைவுகள் இருக்கிறது. நாங்கள் இருவரும் எங்கள் சினிமா வாழ்க்கையைத் தொடங்கும்போது எதிர்கொண்ட சிக்கல்கள், எங்களுக்குள் இருந்த ஒற்றுமைகளைப் பற்றி பேசியிருக்கிறோம். எடுத்த உடன் இருவரும் மேலே வந்து விடவில்லை. முட்டி மோதி முழங்கால்கள் உடைந்து பிறகுதான் எழுந்து நிற்க முடிந்தது. திறந்த மனதுடன் பசுமையான நினைவுகளைத் தந்தற்கு நன்றி ஃபஹத்.
இந்தப் படம் நடித்தால் இவர்களுக்கு பிடிக்கும். இந்த கதை இவர்களுக்கு பிடிக்கும் என நாம் எல்லாம் ஒரு கணக்கு போடுவதுண்டு. நான் இப்போதும் அப்படிதான் தப்புத் தப்பாக கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறேன்.
ஆனால், அப்படி எல்லாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் கதாபாத்திரங்களைப் மட்டும் பார்த்து ஃபஹத் படம் பண்ணுகிறார். அது ரொம்ப நல்ல விஷயம். அதனால் தான் அப்படியான நல்லப் படங்கள் அவரைத் தேடி வருகிறது.
நான் உங்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அண்ணா எனச் சொன்னது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பின்னர் அதை சார் என மாற்றக்கூடாது’’ என சூர்யா பேசினார்.
‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தை ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ளார். இதில் ஃபஹத் பாசில் ஹீரோவாக நடித்துள்ளார். ஷோயிங் பிசினஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.கார்த்திகேயா, ‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். எஸ்.எஸ்.ராஜமவுலி வழங்கும் இப்படம் அக்டோபர் 2-ல் வெளியாகிறது.

