“பாஜக, திமுக கொள்கைகள் வெவ்வேறு; இரண்டும் ஒத்துப்போகாது” – நயினார் நாகேந்திரன்

Priya
574 Views
3 Min Read

“பாஜக கொள்கை என்பது வேறு, திமுக கொள்கை என்பது வேறு. இரண்டும் உடன்படாது, ஒத்துப்போகாது” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்த நாளை ஒட்டி நெல்லை திருமால் நகர் செல்வ விநாயகர் திருக்கோயிலில் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி தமிழக பாஜக சார்பில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “இந்தியாவின் நகைச்சுவை மன்னன், உண்மையைச் சொல்லா மன்னன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. தேர்தல் ஆணையத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். ராகுல் காந்தி சொல்வதை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். அதேபோல் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையம் குறித்த சொல்லும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.

மு.க.ஸ்டாலினை பெரிதும் மதிப்பவன் நான். அவரது தொகுதியிலும் பல வாக்குகள் நீக்கப்பட்டது. ஆனால் அதில் குறைபாடு உள்ளது என அவர் இதுவரை சொல்லவில்லை. ’தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் செயல்படுத்த வேண்டாம், அதனை யாருக்கும் கொடுக்க வேண்டாம் எனச் சொல்ல மாட்டோம்.

தேர்தலில் சொன்ன 2,500 ரூபாய் திட்டம் என்னவானது?. ரூ.2,500 திட்டத்தை வீடு வீடாக முதலில் கொடுங்கள். மின்வெட்டு அதிகரித்து வருகிறது. அதனை சரி செய்யுங்கள். மின் கட்டணம் அதிகரித்து வருகிறது. அது இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தங்க மோதிரம் கொடுக்கும் திட்டத்திற்கு முன் இதனை எல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஊரெங்கும் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கொலைகள் என பல குற்றங்கள் நடந்து வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் பலரும் இந்தச் சம்பவங்களில் கைதாகி உள்ளனர். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக முதல்வருக்கு ஒன்றுமே தெரியவில்லை.

உலகம் முழுவதும் பாஜக உள்ளது. பாஜக கொள்கை வேறு, திமுக கொள்கை என்பது முற்றிலும் வேறு. திமுக – பாஜக கொள்கை இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாது. இரண்டும் உடன்படாது.

தலைமைத் தேர்தல் ஆணையர், இரண்டு ஆணையர்கள் என மூவரும் சேர்ந்து, “நாங்கள் எங்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லை ஒவ்வொரு தகவலையும் பிரித்து தெரிவிக்கவில்லை, ஒருமித்த கருத்தோடு எங்களது தகவலைப் பகிர்ந்து தான் தெரிவித்திருக்கிறோம்,” எனத் தீர்க்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் சொன்னது சரி என உச்ச நீதிமன்றம் வரவேற்பு தெரிவித்து உள்ளது. ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை பிரச்சினை இது. இந்தியாவில் வாழும் தகுதியானவர்கள் வாக்காளர்களாக இருக்க வேண்டும்.

இந்தியர்களை தவிர வெளிநாட்டவர்கள் யாரும் வாக்களிக்க தகுதி இல்லாதவர்கள் என நீதிமன்றம் தெரிவித்து, அதற்காக எஸ்ஐஆர் திட்டம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எஸ்ஐஆருக்கு முன்னால் 6 கோடியே 40 லட்சம் பேர் வாக்காளர்கள் இருந்த நிலையில், 5 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் தற்போது உள்ளனர். 11 சதவீதம் தமிழகத்தில் வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் எஸ்ஐஆர் நடைமுறைக்கு பின்னர் இரண்டு லட்சம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இது பற்றி யாரும் குறை கூறவில்லை. ராகுல் காந்தி சொல்லும் விஷயங்கள் எல்லாம் கேலியும் கிண்டலுமாக உள்ளது. காவல்துறை மானியக் கோரிக்கையில் ஒரு வார்த்தைகூட காவல்துறையினர் பற்றி முதல்வர் பேசவில்லை.

சட்டமன்றத்தில் காவல்துறைக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து முதல்வர் பேசவே இல்லை. தமிழகத்துக்கான, மக்களுக்கான எந்தத் திட்டம் குறித்தும் முதல்வர் சட்டமன்றத்தில் பேசவில்லை. அதற்கு மாறாக மாமன் – மச்சான் பிரச்சினையை மட்டுமே பேசியுள்ளனர்.

நேர்மையான ஆட்சி என்றால் டெண்டர் நேர்மையாக வழங்க வேண்டும். முதல்வர் அலுவலகம் புதுப்பிக்கும் பணி கூட டெண்டர் முறையாக விடவில்லை. டாஸ்மாக் டெண்டர் விட்டதிலும் கூட ஊழல் நடந்துள்ளது. தமிழகத்துக்கான டெல்லி பிரதிநிதி கர்நாடகத்தைச் சேர்ந்தவர். அப்படி இருக்கும்போது அவர் கர்நாடகத்தில் பேசி தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை கொண்டு வந்திருக்கலாம்.

மின்வெட்டு மூலம் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக நெல்லையில் எனது தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் வரும் 4-ம் தேதி நடைபெறுகிறது. ஆகமம் இருக்கும் கோயில், இல்லாத கோயில் என இந்து சமய அறநிலையத்துறையின் பட்டியல் முரண்பாடாக உள்ளது.

பழமையான கோயில்கள் பின்பற்றப்பட்ட நடைமுறை எப்படியோ, அதனை பின்பற்றியும் பூஜை முறைகள் எப்படி நடந்ததோ, அதேபோல் நடத்த வேண்டும். அறநிலையத்துறையின் இந்தச் செயல்பாட்டுக்கு பாஜக வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறது” இவ்வாறு தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply