“என்னை நம்பி வந்தோருக்கு பதவி இல்லை; எனக்கும் பொறுப்பு வேண்டாம்” – வேலுமணி மீண்டும் போர்க்கொடி

Priya
70 Views
1 Min Read

“எனக்கு வழங்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க நான் தயாராக இல்லை. என்னை நம்பி என்னோடு 30 மாவட்ட செயலாளர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு பதவி கொடுக்கவில்லை. நான் மட்டும் பதவியை ஏற்றுக்கொள்ள முடியுமா?” என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி – வேலுமணி இடையே பிளவு ஏற்பட்டது. வேலுமணி – சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் காரணமாக வேலுமணி தரப்பினரின் கட்சிப் பொறுப்புகளை பறித்தார் பழனிசாமி. அதன்பின்னர் இரு அணிகள் சமாதானம் ஆனாலும், அவர்களுக்கு கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். முன்னதாக 4 அதிமுக எம்எல்ஏக்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர்ந்தனர்.

இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உட்பட பலருக்கு கட்சியின் பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், மாவட்ட செயலாளர் பதவிகள் வழங்கப்படவில்லை. அதேபொல சி.வி.சண்முகத்துக்கு கட்சிப் பதவி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், சமீபத்தில் கோவையில் நடந்த கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த காணொலியில், “எனக்கு வழங்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க நான் தயாராக இல்லை. என்னை நம்பி என்னோடு 30 மாவட்ட செயலாளர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு பதவி கொடுக்கவில்லை. நான் மட்டும் பதவியை ஏற்றுக் கொள்ள முடியுமா?

என்னை நம்பி பின்னால் நிற்பவர்கள் கட்சிக்காக கஷ்டப்பட்டவர்கள். சி.வி.சண்முகம், வீரமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் அந்தந்த மாவட்டங்களின் ஜாம்பவான்கள், கட்சியை வளர்த்தவர்கள். அவர்களுக்கு பதவி கொடுக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

வேலுமணியின் இந்தப் பேச்சு காரணமாக அதிமுகவில் மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply