எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் போடும் காவல்துறையின் கண்களுக்கு, மாட்டு வண்டியில் முதல்வருடன் இருந்த தேடப்படும் குற்றவாளி தெரியவில்லையா? என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தாராபுரத்தில் விஜய், மாட்டு வண்டியில் பயணம் செய்தார். அப்போது அசோக் என்பவர்தான் மாட்டு வண்டியை ஓட்டுகிறார். அவர் தவெகவினரால் புகார் கொடுக்கப்பட்டுள்ள ஒரு தேடப்படும் குற்றவாளி. இது காவல்துறையினருக்கு தெரியாதா?
உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையின் கண்களுக்கு, தேடப்படும் குற்றவாளி முதல்வருடன் இருப்பது தெரியவில்லையா? சட்டம், ஒழுங்கு எங்கே செல்கிறது?
முதல்வரே குற்றவாளியை காப்பாற்றுகிறாரா? அமைச்சர் கீர்த்தனா பள்ளிக்கூடக் குழந்தைகளைப் பிரச்சாரத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்.
அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்? எதற்காக அவசர அவசரமாக வழக்குப் போடுகிறீர்கள்? கடந்த 4 மாதங்களாக இந்த அரசு பல கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி இருக்கிறது. ஆனால் திமுக உறுப்பினர்கள் ஒருவரைக்கூட அவர்களால் தொட்டுப் பார்க்க முடியவில்லை. திருப்பதி திருக்குடை ஊர்வலத்திலும் பெண் காவலருக்கு தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பெண் படை எங்கே செல்கிறது? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

