தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: “காவல் துறையில் சுமார் 15 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. காவல்துறையில் அனுமதிக்கப்பட்ட 1.35 லட்சம் பணியிடங்களில், 1.19 லட்சம் பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். மறுபுறம், தேர்வுகளை முடித்துவிட்டு பணி நியமன ஆணைக்காக ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட 2,833 இரண்டாம் நிலைக் காவலர்கள், 180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பாளர்கள் என மொத்தம் 3,644 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வுகள் முடிந்துவிட்டன.
ஆனால், உயரம் அளவீடு தொடர்பான வழக்குகள் மற்றும் தமிழ்வழிக் கல்வி இடஒதுக்கீடு வழக்குகளைக் காரணம் காட்டி, உதவி ஆய்வாளர் உள்ளிட்ட அடுத்தகட்ட பணி நியமனங்கள் காலவரையின்றி முடங்கியுள்ளன. எனவே, சட்டச் சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு கண்டு, தகுதிபெற்ற இளைஞர்களுக்கு தாமதமின்றிப் பணி நியமன ஆணையை வழங்க வேண்டும். வழக்குகளை விரைந்து முடித்து, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

