“மலினமான அரசியலின் வெளிப்பாடு…” – அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாக கனிமொழி, ஜோதிமணி கருத்து

Priya
715 Views
2 Min Read

‘கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை, அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும்’ என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பெண் ஒருவர் காரிலிருந்து இறங்கும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அந்தப் பெண், தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா எனக் குறிப்பிட்டு, அவரது உடை மற்றும் தோற்றத்தைக் குறித்து இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன. அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று தெரிவித்த அமைச்சர் கீர்த்தனா, தன் மீதான விமர்சனங்களை கண்டித்தார்.

இது குறித்து திமுக எம்.பி கனிமொழி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொது வாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும்.

இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன்மூலம் வெளிப்படுகிறது. பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஒரு பெண் பொதுவெளியில் அணியும் உடையைத் தீர்மானிக்கும் உரிமையை மற்றவர்களுக்கு யார் கொடுத்தது?

ஒரு காலத்தில் ஆண்கள் வேட்டி அணிந்தார்கள். நீண்ட தலைமுடி வளர்த்தார்கள். கொண்டை போட்டிருந்தார்கள். காலில் மெட்டி அணிந்தார்கள். காலம் மாறியபோது ஆண்களின் உடையும் தோற்றமும் மாறியது. அதை யாரும் கேள்விக்குள்ளாக்கவில்லை.

அப்படியிருக்க, பெண்களின் நடை, உடை, பாவனைகள் மட்டும் ஏன் தொடர்ந்து சமூக விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன?

குறிப்பாக, பொது வாழ்வில் இருக்கும் பெண்களைக் குறிவைத்து அவர்களின் உடலை, உடையை, தோற்றத்தை கேலி செய்வது என்பது சாதாரண விமர்சனம் அல்ல. அது பெண்களை முழுமையான மனிதர்களாக பார்க்காமல், வெறும் உடலாக மட்டுமே பார்க்கும் மோசமான மனநிலையின் வெளிப்பாடு.

தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாவைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள சர்ச்சையும் இதன் தொடர்ச்சியே. முதலில், அந்தக் காணொளியில் இருப்பவர் கீர்த்தனா அல்ல. ஆனால் அது அவராகவே இருந்தாலும் கூட, ஒரு பெண் என்ன உடை அணிய வேண்டும் என்பதை தீர்மானிக்கவும், அதற்காக அவரை அவமானப்படுத்தவும் யாருக்கும் உரிமை இல்லை.

பொது வாழ்வில் இருக்கும் பெண்களின் கருத்துகளையும், செயல்பாடுகளையும் விமர்சிக்கலாம். ஆனால் அவர்களின் உடலைத் தாக்குவதும், உருவக் கேலி செய்வதும் விமர்சனம் அல்ல; அது ஒரு அப்பட்டமான ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடு. ஒரு சமூக வன்முறை.

இந்தப் போக்கு காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. ஒரே வித்தியாசம் , இன்றைய பெண்கள் இத்தகைய தாக்குதல்களைக் கண்டு கூனிக் குறுகுவதில்லை. தங்கள் மீது வீசப்படும் அவதூறுகளையும், இழிவான விமர்சனங்களையும் கண்டு அஞ்சாமல், பொட்டில் அடித்தது போல தைரியமாக எதிர்கொள்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

பெண்களின் உடை பிரச்சினை அல்ல. பெண்களைப் பார்க்கும் பார்வையே பிரச்சினை. மாற்றவேண்டியது அதைத்தான். கீர்த்தனாவின் தைரியமான எதிர்வினைக்கு எனது பாராட்டுகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply