பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அந்த கட்சியில் இருந்து விலகுவதாக 5 பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவரிடம் கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இன்று டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக தேசிய தலைவர்களை சந்தித்தபின் இந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி என பெயர் வாங்கிய அண்ணாமலை, கடந்த 2019ஆம் ஆண்டு தனது பணியை ராஜினாமா செய்தார். 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் அவர் இணைந்தார். 2021 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட பாஜக, 4 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அப்போதைய தலைவர் எல்.முருகனுக்கு பாஜக மேலிடம் மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கியது. இதனால் 37 வயதான அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
2023ல் ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை பாஜகவை வளர்க்கும் முயற்சியில் மும்முரம் காட்டினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தனித்து போட்டியிடச் செய்து 11.24 சதவீத வாக்குகளை பெற்று தேசியத் தலைமையின் கவனத்தை ஈர்த்தார். இதற்கு பெரும் வெகுமதியை அண்ணாமலை பெறுவார் எனக் கூறப்பட்ட நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து அவர் கீழ் இறக்கப்பட்டார்.
அதிமுகவுடனான கசப்பான அனுபவங்களை கலையவே அண்ணாமலையை கீழ் இறக்கி நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக பாஜக நியமித்ததாக தகவல் பரவியது. அதிமுகவுடனான கூட்டணிக்கு தொடக்கம் முதலே எதிர்ப்புக் கொடி தூக்கி வந்த நிலையில், தனது பேச்சுக்கு கட்சித் தலைமை இசைவு கொடுக்காதது அண்ணாமலையை கடும் அதிருப்திக்குள்ளாக்கியதாகவும், இதன் காரணமாக புதிய கட்சி தொடங்க அவர் திட்டமிட்டதாகவும் தகவல் பரவியது.
அதேநேரம் சட்டமன்ற தேர்தலிலும் அண்ணாமலை போட்டியிட முடியாத சூழல் உருவானது. இருப்பினும், கட்சித் தலைமையின் ஆணைக்கிணங்க தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டினார். இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி தோல்வியை தழுவி தவெக ஆட்சியை கைப்பற்றியது, தனிக் கட்சியை தொடங்கும் சூழலை தனக்கு அமைத்துக் கொடுத்ததாக அண்ணாமலை உணர்ந்ததாக கூறப்படுகிறது.
கட்சியாக தொடங்குவதா? அல்லது இயக்கமாக உருவாகி பின்னர் தேர்தல் களம் காணுவதா? என கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தியதாக தகவல் பரவியது. இதில் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள் புதிய கட்சி தொடங்க அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இன்று டெல்லி தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க டெல்லி சென்றார்.
டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக தேசிய தலைவர்கள் உடன் ஆலோசனை நடத்தி உள்ளார். இதையடுத்து 5 பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை தேசிய தலைவரிடம் கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இன்று மாலை மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலை ராஜினாமா தொடர்பாக பாஜகவில் இருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

