மேகதாது, பாசனத் திட்டம், கொள்முதல் விலை போன்ற மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து முதல்வர் விஜய் பேசாதது ஏமாற்றமளிப்பதாக பாகம தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். உழவர்கள் மற்றும் தமிழக மக்களின் தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பங்கேற்ற முதலாம் அரசியல் நிகழ்ச்சியான திருச்சி பொதுக் கூட்டத்தில் தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக உணவு வழங்கும் உழவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது. முதல்வர் விஜய்யின் திருச்சி பொதுக் கூட்டம் தேர்தலுக்கு பிந்தைய பரப்புரைக் கூட்டமாகவே அமைந்திருப்பது துரதிருஷ்டவசமானது.
2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மே 10ம் தேதி முதல்வராக பதவியேற்ற பிறகு, அந்த விழா நடந்த மேடையிலேயே தமது அரசின் பயணம் எத்தகையதாக இருக்கும் என்பது குறித்து உரையாற்றினார். அதன்பின் 3 வாரங்களாகிவிட்ட நிலையில், எந்த அரசு விழாவிலும் பங்கேற்று அவர் உரையாற்றவில்லை. அரசின் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.
இத்தகைய சூழலில் தான் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருச்சி புனித ஜோசப் கல்லூரித் திடலில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றுப் பேசினார். அது அரசு விழா அல்ல… அரசியல் நிகழ்ச்சி தான் என்றாலும், முதல்வராக விஜய் பங்கேற்கும் முதல் பொது மேடை என்பதால், தமிழ்நாட்டுக்காக அவர் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்து அறிவிப்பார், குறிப்பாக பெருமளவில் அவருக்கு வாக்களித்த விவசாயிகள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு எதிராகவே அவரது உரை அமைந்திருந்தது.
திருச்சி மாநகரை தமிழ்நாட்டின் இதயப் பகுதி என்று முதல்வர் விஜய் அவரது உரையில் குறிப்பிட்டிருந்தார். அதற்கும் மேலாக காவிரி பாசன மாவட்டத்தின் இதயமும் திருச்சி தான். காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் இன்றைய பெரும் கவலை குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கம் போல ஜூன் 12ம் நாள் தண்ணீர் திறக்கப்படுமா? என்பது தான். ஜூன் 12-க்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இது குறித்த நிலைப்பாட்டை அரசு அறிவித்திருக்க வேண்டும். ஒருவேளை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்றால், நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்ய வசதியாக தடையில்லா மும்முனை மின்சாரம், குறுவைத் தொகுப்புத் திட்டம் ஆகியவற்றை அரசு அறிவித்திருக்க வேண்டும். அதற்கான சிறந்த வாய்ப்பு திருச்சி மேடை ஆகும். ஆனால், மறந்தும் கூட மேட்டூர் அணை திறப்பு, குறுவை சாகுபடி குறித்து முதல்வர் வாய் திறக்கவில்லை.
காவிரி பாசன மாவட்டங்களின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக திகழ்வது மேகதாது அணைத் திட்டம் ஆகும். கர்நாடகத்தில் மேகேதாட்டு அணையை வைத்து அரசியல் செய்து வரும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், அம்மாநில முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், அணை கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகள் அச்சமடைந்துள்ள நிலையில், அதைத் தணிக்கும் வகையிலான நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளை முதல்வர் விஜய் திருச்சியில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், முதல்வர் விஜய் அதை செய்யவில்லை./[[
காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500 வீதம் கொள்முதல் விலை வழங்கப்பட வேண்டும் என்பது தான். அது குறித்த அறிவிப்புகளும் கூட முதல்வர் விஜய்யின் திருச்சி பொதுக்கூட்ட உரையில் ஒலிக்கவில்லை.
திருச்சி மாவட்டத்தை மையமாகக் கொண்ட பாசனத் திட்டங்களில் முதன்மையானது காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 17,000 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 1.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பயனடையும். இத்திட்டப் பணிகள் 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வெறும் 3 % பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. இந்தப் பணிகளை விரைவுபடுத்தி காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதும் அந்தப் பகுதி உழவர்களின் எதிர்பார்ப்பு ஆகும். அந்த உழவர்களுக்கும் முதல்வர் ஏமாற்றத்தையே அளித்துள்ளார்.

