கல்லூரிக் கல்வி ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

Priya
117 Views
1 Min Read

கல்லூரி கல்வி ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டதை ரத்து செய்துவிட்டு, அதிக அனுபவம் கொண்ட கல்லூரி முதல்வரை நியமிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையராக பி.பொன்னையா என்ற ஐஏஎஸ் அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது.

உயர்கல்வி குறித்த போதிய அனுபவம் கொண்ட மூத்த கல்லூரி முதல்வர்களை கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், புதிதாக அமைந்துள்ள தவெக அரசும் பழைய நடைமுறையையே தொடர்வது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழகத்தில் அரசுக் கல்லூரிகள் கடந்த 2 ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருவதை தரவுகள் உறுதி செய்கின்றன. தமிழகத்தில் உயர் கல்வியை வளர்க்க வேண்டும் என்றால் பழைய தவறுகள் சரி செய்யப்பட வேண்டும்.

தவறை சரிசெய்ய வேண்டும் அந்த வகையில், பள்ளிக் கல்வித் துறையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இழைக்கப்பட்ட தவறு எவ்வாறு திருத்தப்பட்டதோ, அதேபோல, கல்லூரிக் கல்வி துறையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இழைக்கப்பட்ட தவறும் திருத்தப்பட வேண்டும்.

எனவே, கல்லூரிக் கல்வி ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி பொன்னையாவை நியமிக்கும் ஆணையை ரத்து செய்து விட்டு, அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் முதல்வர்களில் அதிக அனுபவம் கொண்ட ஒருவரை கல்லூரிக் கல்வி இயக்குநர் பொறுப்பில் நியமிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply