மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’வுக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஸ்வேதா மேனன் தலைவரானார்.
‘அம்மா’வின் வரலாற்றில் அதன் முதல் பெண் தலைவராக அவர் பொறுப்பேற்றார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஸ்வேதா மேனன் உள்பட 17 நிர்வாகிகள், பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து ‘அட்-ஹாக்’ கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ‘அம்மா’வின் தலைவர் பதவியில் இருந்து விலக வில்லை என்று அறிவித்த ஸ்வேதா மேனன், ‘அட்-ஹாக்’ கமிட்டிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.
விசாரித்த எர்ணாகுளம் முன்சீஃப் நீதிமன்றம் அக்கமிட்டியின் செயல்பாடுகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில், தன்னுடைய போராட்டம் யாருக்கு எதிரானது என்று ஸ்வேதா மேனன் விளக்கியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், “ஹேமா கமிட்டி அறிக்கையில் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அந்த ‘பவர் குரூப்’-க்கு எதிரானது என்னுடைய போராட்டம். அவர்கள் என்னை அவமதிக்கவும், பதவியில் இருந்து அகற்றவும் முயன்றனர். அவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்தில் எப்போதும் நின்றிருக்கிறேன்.
நான் எழுப்பிய உண்மையான பிரச்சினைகள் மறைக்கப்பட்டு, என்னைப் பற்றிய பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
ஒரு தேசியக் கட்சி (பாஜக), எனக்கு கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன என்பதை யாராவது விளக்க முடியுமா? நான் ஏதேனும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால், அதை ஏன் மறைக்க வேண்டும் ? என்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுபவர்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள், அரசியல், மதம், வகுப்புவாதம் போன்றவற்றை ‘அம்மா’வுக்குள் கொண்டு வராதீர்கள்.
மலையாள மக்கள், சாதி, மதம், அரசியல் எல்லைகளைக் கடந்துதான் கலைஞர்களை நேசிக்கின்றனர். நான் இருக்கும் வரை ஹேமா கமிட்டி அறிக்கையில் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் யாரும் ‘அம்மா’வின் தலைமைப் பொறுப்புக்கு வர முடியாது. அதை உறுதி செய்ய எந்த எல்லைக்கும் செல்லத் தயார். என்னை மிரட்ட முடியாது. என்னை அமைதியாக்க முடியாது. நான் சரணடையவும் பின்வாங்கவும் மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

