“இளைஞர்களின் நலனே மோடியின் முன்னுரிமை” – அமித் ஷா

Priya
15 Views
3 Min Read

வினாத்தாள் கசிவு தொடர்பாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ள நிலையில், அதை ஏற்க மறுத்துள்ள சிஜேபி, பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அதேவேளையில், “இளைஞர்களின் நலனும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலமும் மோடி அரசின் மிக உயர்ந்த முன்னுரிமையாகவும் உறுதியாகவும் உள்ளது.” என்று அமித் ஷா கூறியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், சிபிஎம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன.

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், வினாத்தாள் கசிவு தொடர்பாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நமது இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் தான் எதையும் விட முக்கியமானது. வினாத் தாள்கள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை வழங்கும் வகையில், விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாம் முடிவு செய்துள்ளோம்.

இது தொடர்பான அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இது மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான நமது தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் தப்பிக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை அடுத்து சிஜேபி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு ஒன்றில், “பிரதமரின் புகைப்படத்தை வெளியிட்டு, பிரதமரே பதவி விலகுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பதிவில், “சர்வதிகார அரசாங்கம் வெளியேறுவது தவிர்க்க முடியாதது. பிரதமரே பதவி விலகுங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஜேபியின் மற்றொரு பதிவில், பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவை இணைத்து, “இனி கேள்விகளுக்கு இடமில்லை. பிரதமரே தயவு செய்து பதவி விலகுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிஜேபியின் மற்றொரு பதிவில், “அதிகார மையத்தில் இருந்து கொண்டு எவ்வளவு காலத்துக்குத்தான் ஒடுக்குமுறையாளர் அட்டூழியம் செய்வார். புரட்சி முழக்கங்களால் ஒவ்வொரு துகளும் அதிரப்போகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஜேபியின் அடுத்த பதிவில், “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும், அரசாங்கம் எவ்வித அசைவும் இன்றி இருக்கிறது. ஒருபுறம் இளைஞர்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள். மறுபுறம், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஆதரவாக உள்ளனர். ஆனால், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அரசாங்கம் விழித்தெழுவதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பான பிரதமரின் அறிவிப்பை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இளைஞர்களின் நலனும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலமும் மோடி அரசின் மிக உயர்ந்த முன்னுரிமையாகவும் உறுதியாகவும் உள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரங்களில் விரைவு நீதிமன்றங்களை அமைப்பதன் மூலம் விசாரணையை விரைவுபடுத்தவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் பிரதமர் எடுத்துள்ள முடிவு, இந்த உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகும். வினாத்தாள் கசிவு மூலம் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களுக்கு எதிராகப் பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த முக்கிய நடவடிக்கை ஒரு மைல்கல்லாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வந்த சிஜேபி, தற்போது பிரதமர் நரேந்திர மோடியும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply