சமீபத்தில் மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே.பாக்யராஜ் ஆகியோருக்கு ‘ராஜகோபுரங்கள்’ என்ற பெயரில் திரையுலகினர் சார்பில் நினைவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவர்களின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. கமல்ஹாசன் உள்பட பலர் கலந்து கொண்ட இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
பாரதிராஜாவும் பாக்யராஜும் சாதாரண மனிதர்கள் இல்ல. அசாதாரணமானவர்கள். அவர்களைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். பாரதிராஜா பொதுவாக மத்தவங்க கதையைத்தான் படமாகப் பண்ணுவார். அவர் கதை எழுத மாட்டார். ஒரு கதாசிரியர் வந்து கதை சொன்னா, அதைக் கேட்கும்போதே ஒரு 5 நிமிஷத்துல அந்த கதை எந்த ரூட்ல போகுது, அந்த கதாபாத்திரங்கள் என்னாகும், எங்கே இடைவேளை வரும், எப்படி படம் முடியும் அப்படிங்கறது தெரிஞ்சிடும்.
‘சரி போயா, அப்புறம் பார்த்துக்கலாம், நான் சொல்றேன்யா’ என்று அனுப்பி விடுவார். அதேமாதிரி ஒரு கதையை கேட்கும்போது அவர் நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்காமல் போயிட்டு இருந்தா, ஆர்வமா கேட்பார். ‘நான் நினைச்சது ஒண்ணு, இது வேறு மாதிரி இருக்கே! ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு, மறுபடியும் சொல்லு’ என்று முழுக் கதையையும் கேட்பார்.
எதிர்பாராத 2, 3 ட்விஸ்ட் அந்த கதையில வந்தா, அப்படியே உட்கார வச்சு, ‘நீ நாளைக்கு வா’ன்னு சொல்லிட்டு, கதையை எங்கெங்க டெவலப் பண்ணணும், எந்த கேரக்டர் எப்படி இருக்கணும்னு சொல்லி, கதை கொண்டு வந்தவங்களுக்கு ஒரு கிரீடத்தை சூட்டி அனுப்பி வைப்பார். பாக்யராஜிடம் கதைச் சொன்னா, ஒரு பக்கம் கேட்டுக்கொண்டே மற்றொருபுறம் எப்படி திரைக்கதை அமைக்கலாம்னு யோசிச்சிட்டி ருப்பார். இரண்டும் ஒரே நேரத்துல நடக்கும். அது அவருடைய அசாத்திய திறமை. அதனாலதான் அவர் திரைக்கதை மன்னன்.
தனக்கு ஆங்கிலம் வராது என்ற காம்ப்ளக்ஸ் இரண்டு பேருக்குமே உண்டு. கமல்ஹாசன் ஆங்கிலத்துல பேசறதை கேட்டு பாரதிராஜா ரொம்ப பாராட்டுவார். நடிகை ராதிகா இலங்கையில பிறந்து லண்டன்ல வளர்ந்தவங்க. அவங்க ஆங்கிலம் பேசறதை பார்த்துதான் பாரதிராஜா தன்னோட படத்துல அறிமுகப்படுத்தியிருப்பார். எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் ஏற்கெனவே பண்ணிக் கொண்டிருந்ததை பண்ணினா, நாம ஜெயிக்க முடியாது.
வித்தியாசமா பண்ணணும். அதைத்தான் இவங்க ரெண்டு பேரும் செய்தாங்க. அந்த காலத்துல கிராமத்து கதைகள்ல, பண்ணையார், ஜமீன்தார், பணக்காரன், ஏழை விஷயங்கள்தான் இருக்கும். பாரதிராஜா அதை மாற்றி, ஒரு டெய்லர், பார்பர், சின்ன குடும்பம் அவங்களோட கதைகளை சினிமாவில் காட்டினார்.
பாக்யராஜும் அப்படித்தான். பாக்யராஜ் இயக்குநராகணும்னுதான் நினைச்சிருப்பார். ஆனா பாரதிராஜா, யாரையும் என்னால ஹீரோவாக்க முடியும்னு நம்பிக்கையா இருந்தார். அதனாலதான் பாக்யராஜை ஹீரோவா ஆக்கினார். ரஜினிகாந்த்தான் ஹீரோவுக்கான இமேஜை உடைச்சார்னு சொல்வாங்க. ஆனா, பாக்யராஜ்தான் ஹீரோ இமேஜை உடைச்சார். அந்த உடம்பு, அந்த வாய்ஸ், அந்த கண்ணாடி… நினைச்சு பாருங்களேன்.
இவங்கள்லாம் கடவுள் அனுப்பிய குழந்தைகள். அவங்க திறமையாலயோ, உழைப்பாலயோ முன்னேறி வந்தாங்கன்னு சொன்னா நான் நம்ப மாட்டேன். எத்தனையோ திறமைசாலிகள் உழைக்கறதுக்கு காத்திருக்காங்க. ஆனா, சந்தர்ப்பம் கிடைக்கணும். அதை யார் கொடுப்பா? ஆண்டவன் கொடுப்பான். இப்ப இவங்க ரெண்டு பேரும், கூட இல்லைங்கறது வருத்தமா இருக்கு. ‘படையப்பா’ படம் ஹிட்டானதும் பாரதிராஜா கூப்பிட்டு, “நீ பாட்டி வடை சுடற கதையை சொன்னாலும் படம் பிச்சிட்டு போகும்யா”னு சொன்னார்.
60 வயசுக்கு மேல ஆண்டவன் பெல் அடிப்பான். எல்லாம் முடிச்சுக்கோ, எங்கெங்க ஊர் சுத்தணுமோ, யார் யாரையெல்லாம் பார்க்கணுமோ அதையெல்லாம் பண்ணிட்டு, இதயம், லிவர் எல்லாத்தையும் செக் பண்ணிக்கோன்னு சொல்வான். 70 வயசு ஆச்சுன்னா லிஸ்ட்ல போட்டாச்சுனு அர்த்தம். எந்த நேரமும் அழைப்பு வரலாம். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

