“என் கனவு… வாழ்நாள் பொக்கிஷம்…” – கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த ‘டோரதி’ அனுபவம்

Priya
741 Views
2 Min Read

தன்னுடைய இதயத்தின் ஒரு பகுதியை ‘டோரதி’ எடுத்துக்கொண்டு விட்டதாக நடிகை கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘டோரதி’. இந்தப் படம் விமர்சன ரீதியில் கவனம் ஈர்த்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது பெருமை அளிப்பதாக தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சில புகைப்படங்களை பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், ‘என் இதயத்தின் ஒரு பகுதியை ‘டோரதி’ எடுத்துக்கொண்டுவிட்டாள். உங்களின் மனதின் ஒரு பகுதியில் நான் இடம்பிடித்திருக்கிறேன் என நம்புகிறேன்.

டோரதியுடன் என் மீது நம்பிக்கை வைத்து, உங்கள் மனதுக்கு நெருக்கமான உங்களது தொலைநோக்குப் பார்வையில் என்னையும் ஓர் அங்கம் ஆக்கியதற்காக கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. உங்களின் கனவு படத்தில் இடம் பெற்றிருப்பதை என் கனவு போலவே உணர்கிறேன்.

இளையராஜா… நீங்கள் உருவாக்கும் மாயாஜால உலகத்துக்குள் நானும் ஓர் அங்கமாக இருப்பேன் என நான் ஒருநாளும் எண்ணிப் பார்த்தது இல்லை. வாழ்நாள் பொக்கிஷமாக இதைப் போற்றுவேன்.

ரிஷிகாந்த் கார்த்தி மற்றும் சனந்த் சுப்பு, சிலர் மீது சந்தித்த சில நொடிகளில் வாழ்வில் அவர்களுடன் சில அத்தியாயங்களை நாம் கடந்து வந்திருப்பது போன்ற ஒரு பரிச்சயமான உணர்வு ஏற்படுவது மிகவும் அரிது. நான் முன்பே சொன்னது போல், உங்களின் நலம் விரும்பிகளில் நானும் ஒருத்தி. எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

ஒளிப்பதிவாளர் திரு, நீங்கள் என்னுடைய குரு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். உங்களுடைய பணிகளை எப்போதும் நான் போற்றி வந்திருக்கிறேன். ஆனால், இம்முறை மீண்டும் அதன் மீது காதல் வயப்பட்டுவிட்டேன்.

நான் பெருமை கொள்ளும் ஒரு பயணத்தில் என்னை சிறு பகுதியாக பங்களிக்கச் செய்த இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் படக்குழுவினர், கலைஞர்களுக்கும் நன்றி.

இப்படத்தின் உருவாக்கத்தில் இணைந்து பயணித்த அனைவரும் ஒரு சிறு முத்திரையை பதித்துள்ளனர், என் மீது பெரிய முத்திரையை பதித்துள்ளனர்.

இறுதியாக இந்தப் படத்தின் மீது அன்பை பொழியும் எங்களின் ரசிகர்களுக்கு நன்றி. அன்புடன் டோரதி’ என்று நெகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் நடிப்பில் உருவான ‘டோரதி’ படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இளையராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படம் டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றதும் கவனிக்கத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply