காதல், நகைச்சுவை, ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள ‘சிட்டுக்குறிஞ்சி’யை, அறிமுக இயக்குநர் வி.ஜே.மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கியுள்ளார்.
ரஜித், தீப்ஷிகா, நக் ஷா சரண், வி.ஜே.பப்பு, ஜி.எம்.குமார், ராம்ஸ், ஹலோ கந்தசாமி, தேனி முருகன், சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாரா இசை அமைத்துள்ளார். பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் சார்பில் டி.ஜூட் ஆனந்த் தயாரித்துள்ளார். நவ. 27-ல் வெளியாகும் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் தீனா, இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் இசை அமைப்பாளர் மாரா பேசும்போது, ‘‘ஹங்கேரியைச் சேர்ந்த புடாபெஸ்ட் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா போன்ற உலகப் புகழ்பெற்ற இசைக்குழுவுடன் இணைந்து இப்படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மற்றும் அரிய வாய்ப்பு” என்றார். இப்படத்துக்காக, கொடைக்கானல் அருகே 80 ஏக்கர் பரப்பளவில் கிராமம் மற்றும் பல்வேறு அரங்க அமைப்புகளை உருவாக்கிப் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

