பிரபுதேவா – ரஹ்மான் கூட்டணியின் ‘மூன் வாக்’ டிச.24-ல் ரிலீஸ்

Priya
901 Views
1 Min Read

பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘மூன் வாக்’ படம் டிசம்பர் 24 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபுதேவா இந்தத் தகவலை அவரது எக்ஸ் தளத்தில் பகிந்துள்ளார். அதில், “குடும்ப நகைச்சுவை பொழுதுபோக்கு படமான ‘மூன் வாக்’ டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த விடுமுறையை உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து சிரித்து மகிழ, சிரிப்பொலிகள் நிறைந்த திரையரங்க கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா நாயகனாக நடித்திருக்கும் படம் ‘மூன் வாக்’. இப்படத்தில் அவருடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். அத்துடன் படத்தில் அனைத்துப் பாடல்களையும் அவரே பாடியுள்ளதுடன் படத்தில் ஒரு காட்சியிலும் நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் – பிரபுதேவா கூட்டணியில் 90-களில் வெளியான ‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’ படங்களும் அதன் பாடல்களும் வெற்றி பெற்றிருந்தன. இந்தக் கூட்டணி கடைசியாக 1997-ம் ஆண்டில் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு ‘மூன் வாக்’ படத்தில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.

பிஹைண்ட்​வுட்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கி உள்ளார். அனுப் வி ஷைலஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நீண்ட காலம் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படம் டிசம்பர் 24 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply