ஏகன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘ஹைக்கூ’. இதில் தெலுங்கு நடிகை ஸ்ரீதேவி, மலையாள நடிகை ஃபெமினா ஜார்ஜ் நாயகிகளாக நடித்துள்ளனர். அதிர்ச்சி அருண், மைம் கோபி, இந்துமதி, ஜென்சன், இஸ்மத்தா பானு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சித்துக்குமார் இசை அமைத்துள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரித்துள்ள இந்தப் படம் அக்.23-ல் வெளியாகிறது.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளர் அருளானந்து கூறியதாவது:
இது மனதை வருடும் உணர்வுகளும் நகைச்சுவையும் நிறைந்த ‘ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி’ படம். கவிதை மாதிரியான கதை என்பதால் ‘ஹைக்கூ’ என்று தலைப்பு வைத்துள்ளோம். இயக்குநர், இதன் கதையை சொன்ன அரை மணி நேரத்திலேயே தயாரிக்கத் தோன்றியது. நாங்கள் தயாரித்த ‘ஜோ’ படத்தையும் அரை மணி நேரம் கேட்டுவிட்டே முடிவு செய்தேன். அதே போல இதையும் முடிவு செய்தோம்.
ஒரு பெண்கள் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் படிக்கிறான். எப்படி இது சாத்தியம்? எதனால் அப்படி சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கதை செல்லும். 19 வயதில் இருந்து 26 வயதுவரை ஒருவன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் படம். காதல் கதைதான் என்றாலும் எல்லோரும் தங்களை அதில் தொடர்புப் படுத்திப் பார்த்துக் கொள்ள முடியும்.
இந்தப் படத்தைப் பார்த்தால் பெண்களைப் பார்க்கின்ற ஆண்களின் மனநிலை மாறும் என்று நம்புகி றோம். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் படத்தை வெளியிடுகிறோம். நாங்கள் தயாரித்த முந்தைய படங்களை விட அதிக பட்ஜெட்டில் இப்படத்தைத் தயாரித்துள்ளோம். டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கி இருக்கிறது. இவ்வாறு அருளானந்து கூறினார்.
இப்படத்தின் ஹீரோ ஏகன், நாயகி ஃபெமினா ஜார்ஜ் உடன் இருந்தனர்.

