“நடிப்பதைவிட, படம் இயக்குவதுதான் பிடித்திருக்கிறது” – பாசில் ஜோசப்

Priya
8 Views
2 Min Read

அருண் அனிருதன் இயக்கத்தில், டொவினோ தாமஸ், பாசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அதிரடி’. பாசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், கடந்த வாரம் மலையாளத்தில் வெளியானது.

வரும் 22-ம் தேதி தமிழில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை, ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். அதன் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன், இந்திய அணி கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பாசில் ஜோசப், “சிறு வயதில் இருந்து அதிரடி என்ற வார்த்தையை அதிகம் கேட்டிருக்கிறேன். தற்போது இதே வார்த்தையை தலைப்பாக கொண்ட படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். மலையாளத்தில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

தமிழ் ரசிகர்களுக்காக இந்தப் படத்தின் வசனங்கள் சிறப்பு கவனத்துடன் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள், கலாச்சாரத்துடன் ஒற்றுப்போகும் வகையில் நிறைய முயற்சிகள் செய்திருக்கிறோம். படத்தில் தமிழ் பாடல்களை சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்கிறோம். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

இங்கு வருகை தந்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு நன்றிகள். அவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தோம், ஆனால் அவர் விரும்பவில்லை. இந்தப் படம் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும்.

இந்தப் படத்துக்கு தமிழில் நான் தான் டப்பிங் செய்துள்ளேன்.தமிழில் டப் செய்யும் போது அருமையான அனுபவமாக இருந்தது. ஆரம்பத்தில் சிறு சிறு வார்த்தைகள் கடினமாக இருந்தது. பிறகு தமிழ் அருமையாக வந்தது. எழுத்தாளர்கள் நிறைய உதவியாக இருந்தனர்.

உண்மையான உழைப்புக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரவாக இருந்துள்ளனர். தமிழில் கிடைக்கும் வரவேற்பு, அவர்கள் அளிக்கும் பாசம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த முறை சென்னை வந்த போது கிடைத்த ஆதரவு மறக்க முடியாதது. எப்போதும் தமிழ் ரசிகர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.

நடிப்பு, இயக்கம் இரண்டிலும், எனக்கு இயக்கம்தான் அதிகம் பிடித்திருக்கிறது. நடிப்பின் போது நான் பயணிகள் இருக்கையில் இருப்பது போன்றது, இயக்கத்தின் போது நானே ஓட்டுநர் இருக்கையில் இருப்பதை போன்றதாகும். எனக்கு ஓட்டுநர் இருக்கையில் இருப்பது அதிகம் பிடித்திருக்கிறது. நடிப்பு, இயக்கம் என இரண்டையும் செய்வது பற்றி இதுவரை நான் யோசிக்கவில்லை, இரண்டையும் ஒருசேர செய்வது கடினமாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply