காவல் நிலையங்களுக்குச் செல்லாமல் ஆன்லைன் மூலம் புகார் அளித்து, அதற்கான மின்னணு சிஎஸ்ஆர் ரசீதைப் பெற்றுக்கொள்ளும் வசதியை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால், ரசீதைப் பதிவிறக்கம் செய்வதிலும், புகார் மீதான நடவடிக்கை விவரங்களைப் பெறுவதிலும் சிக்கல்கள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தமிழக காவல் துறையின் இந்த வசதியின்படி, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம்.
இதற்கான சிஎஸ்ஆர் ரசீதையும் இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்காகப் புகார்தாரரின் செல்போன் எண்ணுக்கு சிஎஸ்ஆர் எண், ஆண்டு, பதிவு செய்யப்பட்ட தேதி உள்ளிட்ட விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகின்றன.
ஆனால் இணையதளத்தில் ரசீதைப் பதிவிறக்கம் செய்யும்போது, புகார் பதிவு செய்யப்பட்ட துல்லியமான நேரத்தையும் உள்ளீடு செய்ய வேண்டியுள்ளது. குறுஞ்செய்தியில் அந்த நேரம் குறிப்பிடப்படாததால் ரசீதைப் பதிவிறக்கம் செய்ய முடியாமல் புகார்தாரர்கள் சிரமப்படுகின்றனர்.
சர்வர் தாமதத்தால் குறுஞ்செய்தி வந்த நேரத்துக்கும் கணினியில் பதிவு செய்யப்பட்ட நேரத்துக்கும் வேறுபாடு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கறிஞர் பா.ஜெயவேல் கூறியதாவது: இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கது.
ஆனால், குறுஞ்செய்தியில் புகார் பதிவு செய்யப்பட்ட நேரம் இடம்பெறாததால் சிஎஸ்ஆர் ரசீதைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. இதனால் மீண்டும் காவல் நிலையத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.
அதேபோல் விசாரணைக்குப் பிறகு புகார்தாரருக்குத் தெரியாமலேயே சில சிஎஸ்ஆர்கள் முடித்து வைக்கப்படுவதாகவும் குறுஞ்செய்திகள் வருகின்றன. அதன் விவரங்களைப் பெறவும் காவல் நிலையம் செல்ல வேண்டியுள்ளது.
புகார்தாரருக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தியில் முழுமையான தகவல்கள் இடம்பெற வேண்டும். சிஎஸ்ஆர் முடித்து வைக்கப்பட்டதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இத்திட்டம் முழுமையாகப் பயனளிக்கும் என்றார்.
எனவே, குறுஞ்செய்தியில் புகார் பதிவு செய்யப்பட்ட நேரத்தையும், சிஎஸ்ஆர் முடிக்கப்பட்டதற்கான காரணத்தையும் குறிப்பிடுவதுடன், ரசீதைப் பதிவிறக்கம் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.

