“2 ஆண்டுகளில் அதிமுக நிலைமைதான் திமுகவுக்கும்…” – அமைச்சர் நிர்மல் குமார்

Priya
10 Views
2 Min Read

‘‘அதிமுகவுக்கு இன்று ஏற்பட்ட இதே நிலைமை, இன்றும் 2 ஆண்டுகளில் திமுகவுக்கும் உருவாகும்” என்று மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் எச்சரித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறிது: “கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் பிரதமர் வரும்போது பட்டு வேஷ்டி சட்டை அணிந்து வரவேற்றனர். ஒரு நாளாவது பாஜக பற்றியோ, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராகவோ ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது.

பாஜகவின் மிகப் பெரிய கொத்தடிமையாக 5 ஆண்டுகள் திமுக ஆட்சி நடந்தது. உதயநிதியும் மோடியும் அமித் ஷா பற்றி எங்கேயாவது பேசியிருக்கிறார்களா? ஆனால், எங்கள் தலைவர் விஜய் முதல் மாநாட்டில் முதலிலேயே பாஜக எங்களது கொள்கை எதிரி என்று அறிவித்தவர். கொள்கையில் எப்போதும் சமரசம் கிடையாது என அறிவித்தவர்.

திமுகவும், அதிமுகவும் பாஜகவின் உதவியுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தவர்கள். உதயநிதி அரசியல் கத்துக்குட்டி மாதிரி பேசுகிறார்.

எஸ்ஐஆர் முறையை எதிர்த்து தமிழகம் முழுவதும் எதிர்த்து போராடிய கட்சி தவெக. எஸ்ஐஆரில் தவறு நடந்துள்ளது என எதிர்ப்பு தெரிவித்தவர் விஜய். அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராடியவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அனுமதிக்காத இடங்களில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கவில்லை. எஸ்ஐஆர் நடக்காமல் இருந்திருந்தால் தவெக 120 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்.

தாராபுரம் தொகுதி அதிமுக கோட்டை. அதில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு கொண்டு சென்றவர் எடப்பாடி பழனிசாமி. அவர் திமுகவோடு கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது பிடிக்காமல்தான் தவெகவில் சேர்ந்தனர்.

அதிமுகவின் உண்மையான வாக்காளர்கள் தவெகவின் மீதும், விஜய் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக அதிமுக வாக்குகள் தவெகவுக்கு ஷிஃப்ட் ஆகிவிட்டது. அடுத்து வருகிற எல்லா தேர்தல்களிலும் தவெக வெற்றி பெறும்.

தாராபுரம் அதிமுக கோட்டையாக இருந்தது. அங்கேயே மூன்றாவது இடத்துக்கு அக்கட்சி சென்றுவிட்டது. இனி எந்த தேர்தலானாலும் அதிமுக 3, 4-வது இடத்துக்கே செல்லும்.

இடைத்தேர்தலுக்கும், பொதுத்தேர்தலுக்கும் வேறுபாடு உள்ளது. இடைத்தேர்தலில் 2 வது இடம் கிடைத்ததே மிகப் பெரிய வெற்றியாக திமுக தலைவர் ஸ்டாலின் எண்ணுகிறார். தற்போது அதிமுகவுக்கு இன்று ஏற்பட்ட இதே நிலைமை 2 ஆண்டுகளில் திமுகவுக்கும் வரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply