வானிலை முன்னறிவிப்பு: மதுரை, திண்டுக்கல், தேனிக்கு கனமழை வாய்ப்பு

Priya
789 Views
1 Min Read

தமிழகத்தில் நாளை (நவ.7) மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நாளை (நவ.7) மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நவ.8-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவ.7) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழைப் பொழிவு:

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கின்னக்கோரையில் 8 செ.மீ, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 7 செ.மீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 6 செ.மீ, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், திருப்பூர் மாவட்டம் அவினாசி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply