புத்தகக் கொள்முதலில் பெரும் ஊழல்: அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க எழுத்தாளர் பெருமாள் முருகன் கோரிக்கை

Priya
833 Views
2 Min Read

கோவையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டி யுள்ளார்.

இதுதொடர்பாக நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் நூலகத்துக்காக வாங்கப்பட்ட புத்தகங்களில் ஊழல் நடைபெற்றுள்ளது. ஒரு எழுத்தாளராக நான் பார்த்த காட்சிகளின் அடிப்படையில் இந்தக் கருத்தை முன்வைக்கிறேன்.

இதை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தமிழ் நூல்களை பார்த்தாலே கட்டாயம் ஊழல் நடை பெற்றிருப்பது தெரியவரும்.

5 மடங்கு அதிக விலை

தமிழகத்தில் நூற்றுக்கும் அதிகமான பதிப்பகங்கள் உள்ள நிலையில், குறிப்பாக ஒரு பதிப்பகத்தின் 2,000 புத்தகங்கள் நூலக அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் அதிக விலை கொண்டவையாக உள்ளன.

தமிழ்ச் சூழலில் 100 பக்கங்கள் கொண்ட புத்தகத்துக்கு ரூ.150 விலை நிர்ணயிப்பார்கள். மிகவும் பிரபலமான எழுத்தாளரின் புத்தகமாக இருந்தால் ரூ.200 விலை நிர்ணயிப்பார்கள். ஆனால், இங்கு வழக்கமான விலையைவிட 5 மடங்கு அதிகமாக நிர்ணயித்துள்ளனர். ரூ.300 மதிப்புள்ள புத்தகத்துக்கு ரூ.1,500 விலை வைத்துள்ளனர்.

பெரும்பாலான புத்தகங்களின் விலை ரூ.1,000-க்கும் அதிகமாக உள்ளது. ஒரே பதிப்பகத்திலிருந்து சுமார் 2,000 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவை தரமானதாக இல்லை.

மோசடி புத்தகங்கள்

அந்தப் புத்தகங்கள் முழுமையாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட போலி நூல்களாகத் தெரிகின்றன. அவற்றை மோசடி புத்தகங்கள் என்றுதான் குறிப்பிட வேண்டியுள்ளது. அவற்றில் உள்ள தகவல்களும், தமிழ் மொழிநடையும் இயல்பாக இல்லை.

அந்தப் புத்தகங்களின் ஆசிரியர்கள் இதுவரை வேறு எந்த நூல்களையும் எழுதியதாகத் தெரியவில்லை. இதில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், பல புத்தகக் கட்டுகள் இன்னும் பிரிக்கப்படாமல் உள்ளன. அவற்றையும் பிரித்துப்பார்த்தால், கோடி ரூபாய்க்கும்மேல் ஊழல் நடைபெற்றி ருப்பது தெரியவரும்.

இந்தக் கொள்முதலில் தொடர்புடையவர்கள், புத்தகங்களை விநியோகம் செய்தவர்கள், கொள்முதல் ஆணை வழங்கியவர்கள், சம்பந்தப்பட்ட பதிப்பக உரிமையாளர்கள் ஆகியோரைக் கண்டறிந்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply