“சென்னை மாகாணத்தில் 100% வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி தொடங்குவதையொட்டி, இதனை ஓராண்டு காலம் அரசு விழாவாகக் கொண்டாடுவதுடன், மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்த 100% வகுப்புவாரி பிரதிநிதித்துவம் சென்னை மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டு வரும் நவம்பர் 4 ஆம் நாள் தொடங்குகிறது.
சமூகநீதியின் தொட்டில் தமிழ்நாடு தான் என்பதை உலகிற்கு உணர்த்திய அந்த வரலாற்றுத் தருணத்தைக் கொண்டாடுவது மட்டுமின்றி, அனைத்து சமூகங்களுக்கும் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு என்பது தான் நமது சமூகநீதி இலக்கு என்பதையும் உறுதிப்படுத்த வேண்டியது தமிழ்நாட்டு அரசின் தலையாயக் கடமையாகும்.
இந்தியாவின் சமூகநீதி வரலாறு மிகவும் நீண்டது ஆகும். 1881 ஆம் ஆண்டில் சாகு மகராஜ் ஆட்சிக்காலத்தில் கோலாப்பூர் சமஸ்தானத்தில் பிராமணர் அல்லாதவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
அதன்பின், 1918 ஆம் ஆண்டில் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் ஆட்சியில் மைசூர் சமஸ்தானத்தில் திவான் விஸ்வேஸ்வரய்யா மற்றும் உயர்சாதியினரின் எதிர்ப்பையும் மீறி, சர் லெஸ்லி மில்லர் ஆணையத்தின் பரிந்துரைப்படி பிராமணர் அல்லாதவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் முதன்முதலில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது சென்னை மாகாணத்தில் தான் என்பது தான் நமது சமூகநீதியின் சிறப்பாகும்.
தமிழ்நாட்டில், 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் நாள் பனகல் அரசர் தலைமையிலான நீதிக்கட்சியின் ஆட்சியில், அனைத்து சமூகங்களுக்கும் 100% வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்குவதற்கான அரசாணை எண் 613 பிறப்பிக்கப்பட்டது.
Advertisement
ஆனால், ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் உயர்வகுப்பினரின் தடையால் அந்த அரசாணை நடைமுறைக்கு வரவில்லை. அதனால், 15.08.1922 ஆம் நாள் இன்னொரு அரசாணையை பனகல் அரசர் பிறப்பித்தார். ஆனால், நல்வாய்ப்புக்கேடாக அந்த அரசாணையையும் செயல்படுத்த முடியவில்லை.
1927ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆதரவுடனான முதலமைச்சர் ப.சுப்பராயன் ஆட்சிக்காலத்தில் தான், கல்வித்துறை அமைச்சராக இருந்த முத்தையா முதலியாரின் முயற்சியில் 26.10.1927 ஆம் தேதியிட்ட 1071 எண் கொண்ட அரசாணை 04.11.1927 ஆம் நாள் பிறப்பிக்கப்பட்டது.
அந்த அரசாணையின் மூலம் தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாத இந்துக்களுக்கு 41.67%, பிராமணர்கள், இஸ்லாமியர்கள், ஆங்கிலோ இந்தியர்/ இந்திய கிறித்தவர்கள் ஆகியோருக்கு தலா 16.67%, பட்டியலின மக்களுக்கு 8.33% என மொத்தம் 100 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
பிற்காலத்தில் ஓமந்தூர் ராமசாமி ஆட்சிக்காலத்தில் 24.03.1947 ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் மூலம் இட ஒதுக்கீட்டின் அளவுகள் பிராமணர் அல்லாத இந்துக்களுக்கு 42.86%, பிராமணர் அல்லாத இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிராமணர்கள், ஆதிதிராவிடர்கள் ஆகியோருக்கு தலா 14.29%, ஆங்கிலோ இந்தியர்/ இந்திய கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு தலா 7.14% இட மாற்றியமைக்கப்பட்ட போதிலும், இந்தியாவில் முதலும், கடைசியுமாக நடைமுறைப்படுத்தப் பட்ட 100% வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இது தான். அதனால் தான் சமூகநீதியின் சிகரமாக இது போற்றப்படுகிறது.
செண்பகம் துரைராஜன் வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து 1950ஆம் ஆண்டில் இந்த இட ஒதுக்கீட்டு முறை முடிவுக்கு வந்தது. ஆனாலும், பெரியார், அண்ணா ஆகியோர் நடத்திய போராட்டங்களின் பயனாக 1951 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டு, பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
அப்போது பட்டியலினத்தவருக்கான 16% இட ஒதுக்கீட்டையும் சேர்த்து மொத்தம் 41% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது 1971ஆம் ஆண்டில் 49% ஆகவும், 1980 ஆம் ஆண்டில் 68% ஆகவும், 1990 ஆம் ஆண்டில் 69 விழுக்காடாகவும் உயர்த்தப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் 1989 ஆம் ஆண்டில், ராமதாஸ் நடத்திய சமூகநீதி போராட்டங்களைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50% இட ஒதுக்கீடு இரண்டாக பிரிக்கப்பட்டு, வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமூகங்களை உள்ளடக்கி புதிதாக உருவாக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு 3.5%, 2009 ஆம் ஆண்டில் அருந்ததியர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த இட ஒதுக்கீடுகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்தான் காரணமாக இருந்தார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் இவ்வளவு செறிவான சமூகநீதி வரலாறு கிடையாது.
தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் பெரும்பகுதி இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரியவில்லை. அதை அவர்கள் தெரிந்து கொள்ளவும், சமூகநீதியின் தேவையை புரிந்து கொள்ளவும் சமூகநீதி வரலாற்றை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அதுமட்டுமின்றி, 100% சாதிவாரி பிரதிநிதித்துவம் வழங்குவது தான் உண்மையான மற்றும் முழுமையான சமூகநீதியாக இருக்கும் என்பதால் அதை நோக்கி தமிழ்நாடு அரசை பயணிக்கச் செய்வதும் கட்டாயமாகும். அதற்கு இது தான் மிகவும் சிறப்பான தருணம்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில் தான் வகுப்புகளின் அடிப்படையில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்றாலும், இதன் மூலம் அனைத்து சாதிகளுக்கும் சமூகநீதி கிடைக்க வில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 141 சாதிகளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 115 சாதிகளும், பட்டியலினத்தில் 76 சாதிகளும் இருக்கும் நிலையில், அவர்களில் பல சாதிகளுக்கு இன்னும் இட ஒதுக்கீட்டின் பயன்கள் குறிப்பிடத்தக்க அளவில் கிடைக்கவில்லை.
அதற்கு காரணம் அவர்களின் சாதிகள் இடம் பெற்றுள்ள இட ஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள அவர்களை விட முன்னேறிய சமூகத்தினரே இட ஒதுக்கீட்டின் பெரும்பான்மையான பயன்களை பறித்துக் கொள்வது தான்.
இந்த நிலையை மாற்றுவதற்கான ஒரே தீர்வு, ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடஓதுக்கீடு வழங்குவது தான். அதற்காக தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்பட்டு, அதனடிப்படையில் உள் ஒதுக்கீடுகளும், தனி இட ஒதுக்கீடுகளும் வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, 100% சாதிவாரி பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளையும் தமிழகம் கண்டறிய வேண்டும். அதற்கான சிறந்த வாய்ப்பாக 100% வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் நூற்றாண்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு வரும் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி 2027 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வரை 100% வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதன் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாட வேண்டும்.
இந்தக் கொண்டாட்டத்தின் போதே இட ஒதுக்கீட்டின் தேவை குறித்து மக்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி சர்வேயை நடத்தி அதன் முடிவுகளை வெளியிடுவதுடன், அதனடிப்படையிலான அனைத்து வகையான சமூகநீதி நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

