பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து; ‘மாநில வளர்ச்சியை பின்னுக்கு தள்ளிவிடும்’ – ஸ்டாலின் கண்டனம்

Priya
964 Views
2 Min Read

‘பரந்தூர் பன்னாட்டு விமான நிலைய திட்டத்தைக் கைவிடுவதாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத்தள்ளிவிடும்’ என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவு: பரந்தூர் பன்னாட்டு விமானநிலைய திட்டத்தைக் கைவிடுவதாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக்கூடாது.

மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-ன் கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.

மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில், உலகத் தரத்திலான ஒரு விமானநிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்.

தமிழகத்தின் வளர்ச்சியே மொத்தமாக வீழ்ச்சி ஆகிவிடும். முதல்வரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்.. தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி போன்ற இலக்குகள் சாத்தியமே இல்லை.

எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் தவெக அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகளைத் தகர்க்கும் பேரிடி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, ‘‘பரந்தூர் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கி, சில நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

அப்படியிருக்க, திட்டத்தைக் கைவிட்டால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் நிலை, பரந்தூர் விமான நிலையத்தை மையமாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட பரந்தூர் மெட்ரோ திட்டத்தின் நிலை என்னவாகும்? மாற்று இடத்தில் விமான நிலையம் அமைக்கப்படுமா? அரசியல் காரணங்களுக்காக வளர்ச்சித் திட்டங்களை கைவிடுவது ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதாரத்தையும் பாதிக்கும்’’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply